ҽ

காங்கோ சிறார் காங்கோ சிறார்  (AFP or licensors)

குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்கும் இடங்களாக பள்ளிகள்

கிழக்கு காங்கோவில் 16 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் கல்வி பெற முடியாத நிலையில் இருக்கின்றனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நெருக்கடி காலங்களில், நிலைத்தத் தன்மையைப் பெறுவதிலும், ஆயுதக் குழுக்கள் மற்றும் பாலியல் வன்முறையால் ஏற்படும் பாதிப்புகக்ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான இடத்தை வழங்கவும் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் காங்கோ குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse.

போர், மோதல் மற்றும் வன்முறை காரணமாக காங்கோ ஜனநாயகக் குடியரசில் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் கல்வி குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள காங்கோ குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse அவர்கள், போரினால் பாதிக்கப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆதரவை பள்ளிகளால் வழங்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மோதல் காரணமாக வடக்கு மற்றும் தெற்கு கீவில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட பள்ளிகள் கல்வி நிலையங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மூடப்பட்டுள்ளன என்றும், பள்ளிகள் இடிக்கப்பட்டு சேதமடைந்ததாலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களாக மாறியதாலும் ஏறக்குறைய 7,95,000 குழந்தைகள் கடந்த ஓராண்டில் கல்வியை இழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் காங்கோ குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse,

கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 4,65,000 ஆக இருந்த கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கி தற்போது அதிகரித்துள்ளதாக எடுத்துரைத்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse அவர்கள், கிழக்கு காங்கோவில் 16 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் கல்வி பெற முடியாத நிலையில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு காங்கோவில் தீவிரமடையும் நெருக்கடியினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர் என்று எடுத்துரைத்துள்ள பாஸ்ஸே அவர்கள், இது குழந்தைகளுக்கு ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலை என்றும், குழந்தைகள் இயல்பு நிலையைப் பெறுவதற்கும், மோதலுக்குப் பிறகு மீண்டு தங்களது இயல்பைக் கட்டியெழுப்புவதற்கும் கல்வி அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு காங்கோவில், தற்காலிக கற்றல் இடங்களை அமைத்தல், பள்ளிப் பொருட்கள், நலவாழ்வுப் பொருள்களை வழங்கி கல்வியை ஆதரித்து வருகின்றது யுனிசெஃப் அமைப்பு. மிகவும் தொலைதூரத்தில் இருக்கின்ற, ஓரங்கட்டப்பட்ட குழந்தைகளைச் சென்றடைய வானொலி அடிப்படையிலான கல்வி மற்றும் மிகவிரைவு கற்றல் திட்டங்களைப் பயன்படுத்துவதையும் யுனிசெஃப் பரிசீலித்து வருகிறது.

மேலும் பள்ளிகளில் அல்லது அதற்கு அருகில் உள்ள கோமாவில் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் இருப்பதால், யுனிசெஃப் கண்ணிவெடி ஆபத்து பயிற்சியையும் வழங்கிவருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் பாஸ்ஸே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2025, 12:35