பாலியல் வன்முறை மற்றும் மனித வர்த்தகத்திற்கு உள்ளாகும் காங்கோ குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோவின் கிழக்கு ஜனநாயகக் குடியரசில், வன்முறை அதிகரித்து வருகின்றது என்றும், அங்குக் குழந்தைகள் அதிகளவில் பாலியல் வன்முறை, கடத்தல் மற்றும் ஆயுதக் குழுக்களால் ஆள்சேர்ப்புக்கு ஆளாகின்றனர் என்றும் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 13, வியாழக்கிழமை இன்று, இந்த அதிர்ச்சித் தகவலை அறிக்கையொன்றில் வழங்கியுள்ள அந்நிறுவனம், வடக்கு மற்றும் தெற்கு கிவுவின் அறிக்கைகள் பாலியல் வன்முறை வழக்குகளில் ஐந்து மடங்கு அதிகரிப்பைக் குறிப்பிடுகின்றன என்றும், இதில் 30 விழுக்காடு குழந்தைகள் அடங்குவர் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மோதல்கள் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குழந்தைகளை பலமுறை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளது என்றும், மேலும் 1,100 ஆதரவற்ற குழந்தைகள் இரண்டு வாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.
பலர் ஆயுதக் குழுக்களால் ஆடள்சேர்ப்புக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர் என்றும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆள்சேர்ப்புக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டுகிறது அவ்வறிக்கை.
மேலும் மனித உரிமை மீறல்களை நிறுத்தவும், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற மனிதாபிமான அணுகளை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டுள்ள இந்நிறுவனம், வன்முறையைத் தணிக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நீடித்த அரசியல் தீர்வைக் காண்பதற்கான தூதரக உறவுகளை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
காங்கோவின் கிழக்கு ஜனநாயகக் குடியரசில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பராமரிப்பு, உளவியல் ஆதரவு மற்றும் தற்காலிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான அவரச செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்