ҽ

உக்ரேனிய ஓவியர் இவான் மார்ச்சுக். உக்ரேனிய ஓவியர் இவான் மார்ச்சுக்.  (Yurko Hanchuk)

நன்மை செய்வதில் துரிதமாகச் செயல்படுங்கள்

இவான் மார்ச்சுக் 1936-ஆம் ஆண்டு மேற்கு உக்ரைனின் டெர்னோபில் பகுதியில் உள்ள மோஸ்கலிவ்கா கிராமத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே ஓவியக்கலை மீதான அவரது ஆர்வம் பிறந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நன்மை செய்வதில்  நாம் அனைவரும் துரிதமாகச் செயல்படவேண்டும் என்றும், ஓவியக்கலை வழியாக, தான் பல நன்மைகள் செய்து வருவதாகவும் எடுத்துரைத்தார் உக்ரேனிய ஓவியர் இவான் மார்ச்சுக்.

பிப்ரவரி 15, சனிக்கிழமை முதல் பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை வரை கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் யூபிலி விழாவானது வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஓவியக்கலை பற்றிய தனது கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியபோது இவ்வாறு தெரிவித்தார் உக்ரேனிய ஓவியர் இவான் மார்ச்சுக்.

“மக்களே நன்மை செய்வதில் துரிதமாகச் செயல்படுங்கள்” என்பதே தனது அத்தனைக் கலைப் படைப்புக்களின் முக்கிய நோக்கம் என்று கூறிய 88 வயதான ஓவியர் இவான் அவர்கள், தனது வாழ்க்கை முழுவதையும் கலைக்காக அர்ப்பணித்துள்ளதாகவும், மக்களின் எதார்த்த வாழ்வை ஓவியங்களாகப் படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 10, திங்கள்கிழமை உக்ரைன் தூதரகமும் திருப்பீடமும் இணைந்து நடத்திய ஓவியக் கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்ற ஓவியர் இவான் அவர்கள், நன்மை செய்வது மகிழ்ச்சியானது, விலை உயர்ந்தது என்றும், தீமை செய்வது என்பது மக்களைக் கொன்று விளையாடும், வெறும் வேடிக்கை விளையாட்டு போன்றது என்றும் எடுத்துரைத்தார்.

தனது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் ஓவியங்களில் பிரதிபலிப்பதாக எடுத்துரைத்த ஓவியர் இவான் அவர்கள், தனது படைப்புகளைப் பார்க்கும் மக்களின் கண்களில் உள்ள உணர்ச்சியைப் பார்க்கும்போது தனது உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கின்றது என்றும் கூறினார்.

தன் இளம்வயதில் நாட்டை விட்டு வேறு இடத்திற்குப் புலம்பெயர்ந்த ஓவியர் இவான் அவர்கள், போரினால் மக்கள் படும் துன்பங்களை தொடக்கத்தில் ஓவியமாக வடித்ததாகவும் அதன்பின் மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் வண்ணம் ஓவியக்கலையில் புதிய பாணிகள் மற்றும் நுட்பங்களின் தொடர்ச்சியான ஆய்வினை மேற்கொண்டதாகவும் எடுத்துரைத்தார்.  

இவான் மார்ச்சுக் 1936-ஆம் ஆண்டு மேற்கு உக்ரைனின் டெர்னோபில் பகுதியில் உள்ள மோஸ்கலிவ்கா கிராமத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே ஓவியக்கலை மீதான அவரது ஆர்வம் பிறந்தது.

மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்த இவானுக்கு ஓவியங்கள் வரைவதற்கான எழுதுகோல்களும் வண்ணங்களும் இல்லாத சூழலில் பூக்களில் இருந்து கிடைக்கும் வண்ணங்கள் கொண்டு தொடக்கத்தில் ஓவியங்களை வரைந்ததாகவும் பகிர்ந்து கொண்டார் இவான்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 பிப்ரவரி 2025, 15:04