ҽ

முசாவா உலகளாவிய இயக்கம் முசாவா உலகளாவிய இயக்கம் 

முசாவா உலகளாவிய இயக்கத்திற்கு அமைதிக்கான நிவானோ விருது

2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முசாவா உலகளாவிய இயக்கமானது ஐக்கிய நாடுகள் அவையின் சமூக, பொருளாதார பேரவையின் சிறப்பு ஆலோசனை நிலையில் உள்ள இலாபநோக்கமற்ற, பன்னாட்டு அரசுசாரா இயக்கமாகும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இஸ்லாம் குடும்பத்தில், சமத்துவம் மற்றும் நீதி நிலவுவதற்காக மேற்கோண்ட பல்வேறு முயற்சிகளுக்காக, முசாவா என்னும் உலகளாவிய இயக்கத்திற்கு, அமைதிக்கான நிவானோ விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார் நிவானோ அமைதிக்கான விருது வழங்கும் குழுவின் தலைவர் முகம்மது சபீக்.

பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி பல்வேறு சமூகங்களில் குடியுரிமை, அமைதியான இணக்கமான வாழ்வை வலுப்படுத்துதல், மதங்களுக்கு இடையேயான உரையாடல், ஆன்மிக ஒற்றுமைக்கான சூழல்கள் மற்றும் தளங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்காக முசாவா உலகளாவிய இயக்கம் மேற்கொண்ட மகத்தான முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 42-ஆவது நிவானோ அமைதிக்கான விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார் முகம்மது சபீக்.

2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முசாவா உலகளாவிய இயக்கமானது ஐக்கிய நாடுகள் அவையின் சமூக, பொருளாதார பேரவையின் சிறப்பு ஆலோசனை நிலையில் உள்ள இலாபநோக்கமற்ற, பன்னாட்டு அரசுசாரா இயக்கமாகும்.

உலகெங்கிலும் உள்ள பன்னாட்டு வலையமைப்பில் ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா என 40க்கும் மேற்பட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்கள் முஸ்லிம் நாடுகளில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகளை ஆதரிக்கும் அணுகுமுறைகள், நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் நேர்மறையான மாற்றங்களுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பெண்கள் முன்னேற்றம், மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான பொதுவான அணுகுமுறை போன்றவற்றை ஆப்கானிஸ்தான், எகிப்து, காம்பியா, இந்தோனேசியா, ஜோர்டான், மலேசியா, மொராக்கோ, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, சூடான், உகாண்டா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த அதன் கூட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக வாதிடுதல், சமூகங்களில் பெண்களைப் பாதுகாப்பதற்கான வளங்களை அதிகரித்தல் போன்றவற்றிற்காக பல்வேறு பட்டறைகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகின்ற முசாவா இயக்கமானது, தொழில்நுட்பம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், சமூக மாற்றத்திற்காக வாதிடுதல் போன்றவற்றில் ஈடுபட, இளைஞர்களுக்கு கல்வியையும் கற்பித்து வருகின்றது.

பாலின சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் அமைதியான சகவாழ்வு குறித்த பல்வேறு இணையவழியாகவும் நேரடியாகவும், பட்டறைகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் ஓர் உலகளாவிய நிறுவனத்தை நிறுவுவதைத் தனது நீண்டகால தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது முசாவா அமைப்பு.

நிவானோ அமைதிக்கான விருதின் நோக்கத்துடன் ஒத்துப்போகின்ற பல்வேறு முயற்சிகளை முசாவா அமைப்பு செய்து வருவதால், 42-ஆவது நிவானோ அமைதிக்கான விருது பெறும் தகுதியினைப் பெற்றுள்ளது முசாவா இயக்கம்.

மதங்களுக்கு இடையேயான உரையாடல், மனித உரிமைகள், அமைதியான சகவாழ்வில் பெண்கள் தலைமைத்துவம் போன்றவற்றிற்கு முசாவா உலகளாவிய இயக்கம் மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2025, 12:37