இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம பேச்சு அதிகரிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை மற்றும் வன்ம பேச்சுக்கள் 2024ஆம் ஆண்டில் மிக உச்சத்தை எட்டியதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் Think Tank என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் 2024ஆம் ஆண்டில் 74.4 விழுக்காடு அதிகரித்ததைச் சுட்டிக்காட்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டை தலைமையிடமாகக் கொண்ட இந்த Think Tank அமைப்பு, இஸ்லாமியர்களை வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்களாக சித்தரிக்கும் போக்கு கடந்த ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறது.
பெரும்பான்மையினராக வாழும் இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் பார்ப்பதற்காக கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் காலத்தில், இந்திய பிரதமரும், அவரின் பாஜக கட்சியும், வன்மப் பேச்சுகளில் ஈடுபட்டதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இந்தியாவில் வாழும் 22 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் தங்கள் வருங்காலம் குறித்த ஒருவித அச்சத்தில் வாழ்வதாகக் கூறும் இந்த அமைப்பு, 2023ல் 668ஆக இருந்த வன்மப் பேச்சுகள் 2024ல் 74.4 விழுக்காடு அதிகரித்து 1165ஆக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
2024ல் பொதுத் தேர்தல் நடந்ததால் வன்மப்பேச்சுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எனவும், மொத்த வன்மப்பேச்சுகளுள் 98.5 விழுக்காடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்ததாகவும் இவ்வமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்