ҽ

மருத்துவமனையில் நோயாளி மருத்துவமனையில் நோயாளி 

தற்கொலைக்கு உதவும் அனுமதிக்கு இங்கிலாந்து மருத்துவர்கள் எதிர்ப்பு!

நோய் தணிப்பு பேணல் நடவடிக்கைகளுக்கான முதலீட்டை அதிகரிப்பதை விடுத்து, உயிரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அரசு ஆர்வம் காட்டக்கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தற்கொலைக்கு உதவும் சட்டப் பரிந்துரையை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அதன் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து மருத்துவர்களும் தாதியர்களும் இணைந்து இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவோருக்கு உதவ மாட்டோம் என்பதை தெளிவாக எழுதி இங்கிலாந்து பிரதமர் Keir Starmer அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் தாதியர்களால் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதம், நோய் தணிப்பு பேணல் நடவடிக்கைகளுக்கான முதலீட்டை அதிகரிப்பதை விடுத்து, உயிரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அரசு ஆர்வம் காட்டக்கூடாது என அரசை விண்ணப்பிக்கிறது.  

மருத்துவர் உதவியுடன் தற்கொலைகளை அனுமதிக்கும் சட்டப்பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், அது மருத்துவப் பணியாளர்களிடையே மன உளைச்சலுக்கும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லும் என்ற கவலையையும் வெளியிட்டுள்ள இந்த மருத்துவ குழு, இந்த சட்டப்பரிந்துரை சட்டமாக்கப்பட்டால், அது வலுவிழந்த நோயாளிகளின் உரிமைகள் மீறப்படவும், மருத்துவர்கள் மீதான நோயாளிகளின் நம்பிக்கை இழக்கப்படவும் வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளது.

தற்கொலைகளுக்கு உதவுதல் மற்றும் கருணைக்கொலைக்கு சார்பாக இந்த சட்டபரிந்துரைக்கு ஆதரவளிக்கப்படுவது குறித்து தங்கள் கவலையை வெளியிடும் மருத்துவப் பணியாளர்கள், தற்கொலைக்கு தூண்டப்படுவதிலிருந்து அல்லது கருணைக்கொலையை தவறாக பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் சட்ட விதிகள் குறித்து அரசு சிந்திக்கவிலை எனவும் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.

கொலைச் செய்வது அனைத்து சமூகங்களிலும் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இன்றைய நவீன சமூகம் உயிரைக் காப்பது என்பதலிருந்து உயிரை சட்டத்தின் துணைகொண்டு எடுப்பதுவரை சென்றுகொண்டிருகிறது எனக் கூறும் இந்த கடிதத்தில் 34,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் தாதியர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

சட்ட அனுமதி இருக்கின்றபோதிலும், மருத்துவர்களாகிய தாங்கள் எச்சூழலிலும் நோயாளிகளின் உயிரைப் பறிக்க உதவமாட்டோம், ஏனெனில், உயிரைக் காப்பதே ஒரு மருத்துவரின் தொழிலும் கடமையுமாகும் என மேலும் கூறியுள்ளது, இங்கிலாந்து பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2024, 15:19