காலநிலை மாற்றத்தால் ஆப்கானிஸ்தானில் 38,000 பேர் இடம்பெயர்வு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மிகத் தீவிர காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 38,000 பேர் தங்கள் இல்லங்களைவிட்டு வேறு இடங்களில் அடைக்கலம் தேடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக Save the Children என்ற பிறரன்பு அமைப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறும் இவ்வமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானிற்கான பன்னாட்டு உதவிகள் மிகப்பெரிய அளவில் குறைந்துவருவது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் கால நிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட 38,000 ஆப்கானிஸ்தான் மக்களுள் பாதிபேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது Save the Children என்ற பிறரன்பு அமைப்பு.
இதற்கிடையே, 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, வீடுகளை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடத்தை வகிக்கிறது ஆப்கானிஸ்தான்.
காலநிலை மாற்றம் மற்றும் உணவுப்பொருட்களின் அதிக விலை ஆகியவைகளால் ஆப்கானிஸ்தானில் மூன்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உணவு நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கும் இவ்வமைப்பு, ஆப்கானிஸ்தானின் 34 மாவட்டங்களில் 25, வறட்சியை சந்தித்துவருவதாக தெரிவிக்கும் ஐ.நா. அறிக்கையை சுட்டிக்காட்டுகிறது.
கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கும் கிணறுகளிலிருந்தே வீட்டுப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் எடுப்பதால், தொற்று நோய்கள் பரவுவதும் அதிகரித்து வருவதாக Save the Children அமைப்புத் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்