ҽ

ஆப்கனில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு ஆப்கனில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு   (ANSA)

ஆப்கானில் தீவிர வானிலை காரணமாக 38,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!

1976-ஆம் ஆண்டு முதல் ஆபத்தில் உள்ள ஆப்கானிய குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்காகப் போராடி வரும் Save the Children அமைப்பு, கடந்த ஏழு மாதங்களில் அங்கு ஏற்பட்டுள்ள இடப்பெயர்வுகளை உறுதிப்படுத்தியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தீவிர வானிலை காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள பல பகுதிகள் கடுமையான இடப்பெயர்வை எதிர்கொள்வதால், அடிப்படை ஆதாரங்கள் இல்லாத சமூகங்களுக்கு தூய்மையான தண்ணீர் மற்றும் உதவியை வழங்குவதற்கான அவசர முயற்சிகளில் இறங்குமாறு அழைப்புவிடுத்துள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் கணிப்பின்படி, 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில், 2023-ஆம் ஆண்டைவிட அதிகம், அதாவது, ​​37,076 குழந்தைகள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது அவ்வமைப்பு.

வெள்ளம், வறட்சி, தீவிர வெப்பநிலை மற்றும் புயல்கள் உள்ளிட்ட காலநிலை பிரச்சனைகள் ஏராளமான ஆப்கானிய குழந்தைகளையும் குடும்பங்களையும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளுகின்றது என்றும் எடுத்துக்காட்டுகிறது அவ்வமைப்பு.

புவியியல் ரீதியாக, ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் உள்ளது என்றும், இது குறிப்பாக மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளைச் சுற்றிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், நூறாயிரக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது.

குடிநீருக்காக வீடுகளை விட்டு வெளியேறும் இளைஞர்கள், விலங்குகள் குடிக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதால் நோய்கள் மற்றும் காலரா உள்ளிட்ட பிற ஆபத்தான தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றிப்பின்போது தெரிவித்தது இவ்வமைப்பு.

மறுபுறம், அந்நாட்டில் ஏற்படும் பெருவெள்ளம் ஆயிரக்கணக்கான மக்களை அச்சுறுத்துகிறது என்றும், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுவதும், நாட்டின் ஏறக்குறைய முக்கால்வாசிப் பகுதியினர், பலரின் வீடுகளை அடித்துச் சென்ற மரண வெள்ளத்தின் மோசமான நிகழ்வுகளைக் கண்டனர் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2024, 11:27