ҽ

ஹெயிட்டி நாட்டு குழந்தைகள் ஹெயிட்டி நாட்டு குழந்தைகள்  (AFP or licensors)

ஹெயிட்டியில் 300,000 குழந்தைகள் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்வு

ஹெயிட்டி நாட்டில் ஆயுதம் தாங்கிய வன்முறைகளால் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை என்ற வகையில் புலம்பெயர்ந்தவர்களாக மாறுவதாக UNICEFன் அறிக்கை தெரிவிக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஹெயிட்டி நாட்டில் ஆயுதம் தாங்கிய வன்முறைகளால் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை என்ற வகையில் புலம்பெயர்ந்தவர்களாக மாறுவதாக UNICEF என்னும் குழந்தைகளுக்கான அவசரகால நிதியமைப்பு எடுத்துரைக்கிறது.

ஹெயிட்டி நாட்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மார்ச் மாதத்திலிருந்து 60 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய வன்முறைகளால் ஹெயிட்டி நாட்டில் 6 இலட்சம் பேர் வரை நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளதாகவும், இதில் 3 இலட்சம் பேர் குழந்தைகள் எனவும் கூறும் யுனிசெப் அமைப்பு, அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும் எடுத்துரைக்கிறது.

குழந்தைகளும் இளம்பருவத்தினரும் தாக்குதலுக்கும், சுரண்டலுக்கும், பாலியல் அத்துமீறலுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் கூறும் இவ்வறிக்கை, பலர் தங்கள் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு நல ஆதரவு, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் போன்றவை எட்டாக் கனியாக இருப்பதாகவும், அவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாகவும், வன்முறைகளால் கல்வியை இடையில் நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் யுனிசெப்பின் அண்மை அறிக்கை தெரிவிக்கிறது.

மழைக்காலத்திற்கு என நலத்தொடர்புடைய விடயங்களில் தன்னை தயாரித்துவரும் ஹெயிட்டி நாட்டில் ஏற்கனவே 84,000க்கும் மேற்பட்டோர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2024, 14:49