ҽ

புயல் பாதிப்புகள் புயல் பாதிப்புகள்   (ANSA)

கரீபியனில் பெரில் சூறாவளியால் ஆபத்தின் பிடியில் 30 இலட்சம் குழந்தைகள்!

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் உலகில் பேரழிவுகள் அதிகம் ஏற்படும் இரண்டாவது பகுதி ஆகும். கரீபியனில், ஒவ்வொரு ஆண்டும் 50 இலட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உட்பட 19 இலட்சம் மக்கள் பேரழிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்த ஆண்டின் முதல் பெரிய சூறாவளியான, பெரில் சூறாவளி, ஜூலை 1, இத்திங்களன்று, தென்கிழக்கு கரீபியனில் கரையைக் கடந்தபோது, பரவலான சேதத்தை ஏற்படுத்தியது என்றும், இதனால், கரீபியன் தீவுகளில் காற்று, அடைமழை மற்றும் திடீர் வெள்ளம், ஏறக்குறைய 30 இலட்சம் குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று யுனிசெஃப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

பெரில் என்ற இந்தச் சூறாவளி கிரெனடா, புனித வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், பார்படாஸ் மற்றும் புனித லூசியாவைத் தாக்கியது என்றும், அப்போது ஏற்பட்ட அதிக காற்று, புயல் அலைகள் மற்றும் பலத்த மழை, வீடுகள் மற்றும் பள்ளிகள் உட்பட குழந்தைகளுக்கான பாதுகாப்பான இடங்களை சேதப்படுத்தின என்றும் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

இதுகுறித்து பேசிய இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான யுனிசெஃப் மாநில இயக்குநர் Karin Hulshof அவர்கள், பெரில் சூறாவளி, கரீபியன் கடலில் இதே வழியில்  தொடர்ந்து பயணிப்பதால், உயிரிழப்பைத் தடுக்கவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், கரீபியன் முழுவதும் உள்ள எங்கள் குழுக்கள் தேவையில் இருக்கும் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான தேசிய அளவிலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளன என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தீவிர வானிலை நிகழ்வுகள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துவதால், யுனிசெப் மாநிலம் முழுவதும் அவசரகால ஆயத்த முயற்சிகளை ஆதரிக்கிறது என்றும், வானிலை அவசரநிலைகளுக்குத் தயார்படுத்துவதற்கும் அதற்குப் பதிலளிப்பதற்கும், குழந்தைகளுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தேசிய திறன்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் Karin

இந்த ஆண்டு, கரீபியன் படுகையில் உள்ள நாடுகள் உட்பட இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் ஏற்படும் அவசரநிலைகளுக்குத் தயாராகவும், அதற்குப் பதிலளிக்கவும் 1 கோடியே 24 இலட்சம் அமெரிக்க டாலர்களைக் கோரியுள்ளது யுனிசெஃப்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2024, 14:48