ҽ

ஆப்கானிஸ்தான் செங்கல்சூளையில் சிறுமிகள் ஆப்கானிஸ்தான் செங்கல்சூளையில் சிறுமிகள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு

வயல்களிலும், சுரங்கங்களிலும் பல லட்சம் குழந்தைகள் வியர்வை சிந்தி கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தீ மெல்ல மெல்லப் பரவி, எதிர்கால உலகையே எரித்து சுடுகாடாக மாற்றிவிடும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

"இந்த உலகில் உண்மையான அமைதியை நாம் கற்பிக்க வேண்டும் என்றால், போருக்கு எதிரான உண்மையான போரை நாம் நடத்த வேண்டும் என்றால், நாம் அதை குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்" என்றவர் பாரத தேசத்தந்தை மகாத்மா காந்தி.

இம்மாதம் 12ஆம் தேதி நாம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தைச் சிறப்பிக்க உள்ளோம். பல்வேறு வழிகளில் முன்னேறிவரும் இன்றைய நவீன உலகில் பாலர் தொழிலாளர் முறை இன்னும் தொடர்வது ஏன்? படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. விடை கிடைக்காமலேயே பல தவறுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அனத்துலக தொழிலாளர் அமைப்பு (ILO) குழந்தை தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை நிறுவியது. 22 ஆண்டுகளைக் கடந்து வந்துவிட்டோம். ஆனால், இந்த நோக்கத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பது கேள்விக்குறியே.

உலகில் 16 கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 6.3 கோடி பேர் பெண் குழந்தைகள். குழந்தைத் தொழிலாளர்களுக்கு இச்சமூகத்தில் இடமில்லை. இது குழந்தைகளின் எதிர்காலத்தை கொள்ளையடிக்கிறது மற்றும் குடும்பங்களை தொடர்ந்து வறுமையில் வைத்திருக்கிறது. குழந்தை தொழிலாளர்கள் இந்த உலகின் மிகப்பெரிய சோகம். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது உலகின் மிகப்பெரிய சட்ட விரோதச் செயல். அது இயற்கைக்கு முரணான ஒரு சமூகக் குற்றம். குழந்தைகளின் கனவுகளை கலைப்பதற்கு ஈடான வன்செயல் எதுவும் இல்லை. குடும்பங்களிடம் இருந்தும் பிரித்து, அவர்கள் ஆற்றலுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேலைப் பளுவை திணித்து, அவர்களை பெரு நகரங்களில் சிறு விலைகளுக்கு போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம், தீவிரவாதம் போன்ற பல சமூக விரோத செயல்களுக்காக விற்கப்படுவதும் நடக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் படி உலகெங்கிலும், 5 முதல் 17 வயது வரையிலான சுமார் 16 கோடி குழந்தைகள் பாலர் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 7 கோடியே 30 இலட்சம் பேர் அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். உலகின் ஏழ்மையான நாடுகளில், நான்கு குழந்தைகளில் ஒருவர் தங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களில் ஏஎறக்குறைய பாதிபேர் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறார்கள். அங்கு 5 குழந்தைகளில் ஒரு குழந்தை தொழிலாளராக வேலை செய்கிறது. குழந்தை தொழிலாளர் வளர்ந்து வரும் கிழக்காசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமல்லாது நன்கு வளர்ச்சி அடைந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட மிகப் பெருமளவில் காணப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியான விடயம்.

உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மற்ற குழந்தைகளை போல விளையாட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். போதிய உணவும் கிடைப்பதில்லை. இவர்கள் குழந்தைகளாகவே இருப்பதற்கு கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதிலும் கொடுமையான விஷயம் என்னவெனில் சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.

இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 5 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3.53 கோடி பேர் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 80 விழுக்காட்டினர் கிராமங்களில் உள்ளனர். 2001ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவு. 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களில் 3ல் ஒரு குழந்தைக்கு அவர்களது பெயரை கூட எழுத தெரியாது. நாட்டில் உ.பி., பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவை குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் முதல் 5 இடத்தில் உள்ளன. நிலக்கரி சுரங்கம், விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குறைந்த ஊதியத்தில், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். வார விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொத்தடிமைகள் போல வேலை பார்க்கின்றனர். குழந்தை தொழிலாளர் தான் உலகிலேயே மிகவும் மலிவான மனித வளம். பல நேரங்களில் அது இலவசமாக கிடைத்து விடுகிறது. உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களின் உற்பத்தியில் பெரும்பாலான குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வயல்களிலும், சுரங்கங்களிலும் பல லட்சம் குழந்தைகள் வியர்வை சிந்தி கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு காட்டுத்தீ. இளம் தளிர்கள் மேல் பற்றிக்கொண்ட இந்தத் தீ மெல்ல மெல்லப் பரவி, எதிர்கால உலகையே எரித்து சுடுகாடாக மாற்றிவிடும். ஒரு சமூகமாக அரசும், நிறுவனங்களும், மக்களும், சட்டமும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே ஒழிய இதனை அணைக்க வேறு வழி இல்லை.

ஆய்வுகளின்படி, உலகளவில் ஒவ்வொரு 10 குழந்தைகளில் ஒருவர் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். எனினும் இந்த விகிதம் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளது என்பதும் உண்மை. குழந்தை தொழிலாளர்கள் இரண்டு வகையில் உருவாகுகிறார்கள். வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக பெற்றோர், பாதுகாவலர்கள் தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, அல்லது தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பது ஒரு வகை. இரண்டாவது வகை குழந்தை கடத்தல். உலகின் இருண்ட அறைக்குள் பணம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்ட குழந்தை கடத்தலில் இலட்சக்கணக்கான குழந்தைகள் குழந்தை தொழிலாளராக விற்கப்படுகிறார்கள்.

நல்ல மாற்றங்கள் அண்மைக்காலங்களில் வரத் தொடங்கினாலும், இன்று வரை உலகின் எல்லா இடங்களிலும் நெருக்கடியான தொழிற்சாலைகளில், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், உரிமை மீறல்களுக்கு ஆளான படி, பல கோடிக் குழந்தைகள் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எந்தக் குழந்தையும் விரும்பி வேலைக்குச் செல்வதில்லை. அவர்கள் பலவந்தமாக இந்தச் சுழலுக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பாக வளர, சுதந்திரமாக வாழ, தரமான கல்வி கற்க உரிமை உள்ளது. அது எந்தக் காரணத்திற்காகவும் பறிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம். இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகை கையில் எடுத்துக் கொள்ளப் போகிறவர்கள். "குழந்தைத் தொழிலாளர்" என்ற சொற்றொடர், மனரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, தார்மீக ரீதியாக குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. ஒரு பள்ளி செல்ல வேண்டிய வயதுடைய குழந்தை பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் எந்தவொரு வேலையும், குழந்தைத் தொழிலாக கருதப்படும் என்பதையும் இந்த சொற்றொடர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12 அன்று, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் என கொண்டாடப்படுவது, குழந்தைத் தொழிலாளர் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மேலும் இந்த நாளில் அவர்களுக்கு உதவ எண்ணற்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலமும், கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும், சமூகப் பாதுகாப்பை வழங்குவதன் மூலமும், இந்த அவலத்தை நாம் அகற்றலாம்.

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானவை, வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை என்பனவாகும். அந்த உரிமைகளை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் நலன் பேணும் வகையில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பதே அரசின் இலக்கு என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் களிக்கவேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளிலிருந்துப் பிரித்தெடுத்து, பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றம்; அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடும் பாதகம் என 2023ஆம் ஆண்டிற்கான செய்தியில் கூறினார் தமிழக முதல்வர். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவது அவர்களுக்கு அளிக்கப்படுகிற மிகப் பெரிய விடுதலை, வாழ்நாள் பரிசு. தமிழக அரசு அதனைத் தன் தலையாய கடமையாகக் கருதி, விழிப்புணர்வை விதைத்துக் கொண்டு வருகிறது. மாபெரும் இயக்கமாக இது ஓங்கி வளர்ந்திருப்பதால், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக முன்னேறியிருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பதே அரசின் இலக்கு என அவர் மேலும் கூறியுள்ளார்.

குழந்தைகளை மிகப் பெரிய பேறு என்று கருதியதால்தான் வள்ளுவர் மழலைகளுக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார். மழலைகளின் குரல்கள் யாழையும், குழலையும் மிஞ்சுவன என்றுப் பாராட்டினார். இவ்வாண்டிற்கான, அதாவது 2024ஆம் ஆண்டிற்கான தலைப்பாக, “நமது அர்ப்பணங்களில் செயல்படுவோம். பாலர் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொணர்வோம்”, என்பது எடுக்கப்பட்டுள்ளது. 10 குழந்தைக்கு ஒரு குழந்தை பாலர் தொழிலாளியாக துயர்களை அனுபவித்துவரும் இன்றைய நவீன உலகில் நாம் எத்தகைய அர்ப்பணங்களுடன் செயல்படப் போகிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே திரும்ப திரும்ப கேட்டுக் கொள்வோம்.

பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக தான், கட்டாயமாக வேலைக்கு அனுப்பப் படுகின்றனர். எனவே முதலில் பெற்றோர்களின் வருமானத்துக்கு வழி செய்ய வேண்டும். வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும். சிறுவர்களை, சிறுமிகளை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது இந்தியாவில் சட்டப்படி தண்டனைக்குரியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2024, 13:11