ҽ

ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் 

வாரம் ஓர் அலசல் – மே 15. அனைத்துலக குடும்ப தினம்

அம்மாவின் அர்ப்பணிப்பை நினைத்து பார்த்து மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தை சிறப்பித்த கையோடு, மே 15 ஆம் தேதி உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தை அன்னை மரியாவுக்கென சிறப்பாக அர்ப்பணித்து, செபமாலை செபித்து, அந்த அன்னையை மகிமைப்படுத்தி வருகிறது. மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் வசந்த  காலம், அதாவது, மலர்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த வசந்த காலத்தில் மகப்பேறுக்கு மதிப்பளிக்கும்வண்ணம் நாம் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அன்னைக்கெல்லாம் அன்னையான மரியாவை சிறப்பிக்கும் இந்த மே மாதத்தில்தான், திருக்குடும்பத்தை சிறப்பான முறையில் வழி நடத்திய அன்னை மரியாவை சிறப்பிக்கும் இதே மே மாதத்தில்தான், உலக குடும்ப தினத்தையும் கொண்டாடுகிறோம். இந்த மே மாதத்தில் தான் அன்னமரியா பாத்திமா நகரில் மூன்று குழந்தைகளுக்கு முதன்முதலில் காட்சியளித்தார். மே மாதம் பதின்மூன்றாம் தேதி பாத்திமா அன்னை திருவிழாவையும், 31ஆம் தேதி அன்னைமரியா எலிசபெத்தைச் சந்தித்ததையும் விழாவாகக் கொண்டாடுகிறோம். இன்றைய நம் ஒலிபரப்பில் உலக குடும்ப தினம் குறித்து நோக்குவோம்.

குடும்பத்தின் முதுகெலும்பாகத் திகழும் அம்மாவின் அர்ப்பணிப்பை நினைத்து பார்க்கும் வகையில் மே 12ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட கையோடு, மே 15 ஆம் தேதி அனைத்துலக குடும்ப தினத்தை சிறப்பிக்க உள்ளோம்.

1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனமானது குடும்ப அமைப்பை கொண்டாடுவதற்கும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அனைத்துலக குடும்ப தினத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. வறுமை, சமத்துவமின்மை போன்ற குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், நமது சமூகத்தில் குடும்பங்களின் பங்கை அங்கீகரிப்பதில் அனைத்துலக குடும்ப தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அறிவியல் உலகில் இயந்திரமாக மாறிய மனிதன் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது அமைந்துள்ளது. பல திசை நோக்கிப் பிரிந்தாலும் குடும்பத்தோடு ஒரு நாள் இணைய வேண்டும் என்பதற்காகத் திருவிழாக்கள் கொண்டாடப்படவேண்டியது கட்டாயமாகி வருகிறது. ஒரே வீட்டில் உறவினர்களால் நிறைந்திருந்த பல குடும்பங்கள், தற்போது தனித்தனி குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றன. இது போன்ற குடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்துவதற்காகவே மே 15ஆம் தேதி உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை வியந்து நோக்குவது அதன் குடும்பம்,  கலாச்சாரம், பண்பாடுகள் ஆகியவையாலேயே. இதில் குடும்பங்கள் இந்தியாவில் கோவில்களாய் போற்றப்பட்ட காலம் உண்டு. மனித வாழ்க்கையின் அடித்தளமே குடும்பம் தான். பழங்காலத்தில் கூட்டுக்குடும்ப முறையில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலமும் இங்கு இருந்தது. தற்போது அதன் அவசியத்தை உணர வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். பிரிந்து கிடக்கும் நாம் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது தான் உலக குடும்ப தினம்.

காலங்களும், நேரங்களும்  மாறின. தொழில் முறை, தனிமை என பல்வேறு காரணங்களால் கூட்டு குடும்ப முறை சிதைந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் புதுமணத் தம்பதி தனிக்குடித்தனம் போவது திருமணத்திற்கு முன்பே முடிவாகி விடுகிறது.  தாத்தா மடி  அரட்டை,  பாட்டியின் நிலாச்சோறு,  அத்தைகளின்  கதை  என எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் இன்று காணாமல் போய்விட்டன.  அதனால் தான் கோபம், கட்டுப்பாடின்மை, பொறுமையின்மை என ஒருவிதமான மனநோய்களுக்கு ஆட்பட்டது போல குழந்தைகளின் வாழ்க்கை மாறிவருகிறது. அழிந்து போன சிட்டுக் குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பும் சிதைந்து போய் விட்டது.

சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவுப் பெயர்கள் எல்லாம் மறைந்து ஆன்ட்டி, அங்கிள் என்பவை பொதுப்பெயர்களாகிவிட்டன. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்றழைத்த மரபுகளைக் கடந்து, அனைவரையும் கஸின் என்றழைக்கத் தொடங்கிவிட்டோம்.  மனித வாழ்க்கையே  இயந்திர மயமாகிப்போனது. காலத்தின் கட்டாயமாகிப் போன மற்றொரு மாற்றங்களில் ஒன்று, பணி காரணமாக  தாய், தந்தையரைப் பிரிந்து  வெளிநாட்டில் வசிப்பது, மற்றும், கிராமங்களை விட்டு விட்டு நகரங்களில் வாழ்வது என குடும்பம் பிரிந்து போனது. பிரிந்துபோனது என்று கூறுவதைவிட, சிதைந்து போனது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

தற்போது ஒரு விடுமுறை தினத்தில் குடும்பத்தில் நாம் என்ன பார்க்கிறோம்?  அப்பா வாட்ஸ் அப்பில்,  அம்மா  போனில்,  பிள்ளைகள் பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பதே என்றாகி விட்டது. பணி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனேயே உறங்கச் செல்வதையும் வழக்கமாக்கி வருகிறோம். சந்தோஷமாக கூடி பேசுவதே இல்லை. குடும்பத்துடன் சுற்றுலா சென்றாலும் அதை  அனுபவிக்காமல் செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.  இந்த நிலை மாறியாக வேண்டும். கல்வி, பணிவாய்ப்பு மற்றும் இணையதளங்களின் வருகையால் வீட்டுக்குள்ளேயே குடும்பங்கள் சிதறி இருப்பதை தற்போது காண முடிகிறது. ஒரே கூரையின் கீழ் இருந்தாலும் வேறு வேறு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதை தவிர்க்கும் விதமாக சில உறுதிமொழிகளை நாம் எடுக்க வேண்டும். அலுவலகம் என்பது வேறு, குடும்பம் என்பது வேறு என்பதை நினைவில் கொண்டு அலுவலகப் பணிகளை வீட்டில் செய்யாமல் குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

முதலில் நம் குடும்பத்தை ஒற்றுமையாக்கி அமைதியுடன் வாழப் பழக வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவினால் மட்டுமே நம்மால் சமூகத்தில் அமைதியான மனிதராக வலம் வந்து மாற்றத்தை உருவாக்க முடியும். நம் வழியாக மற்றவரும் அமைதியை அடைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, உலகளாவிய இந்த குடும்ப தினத்தில் உலகமுழுவதும் ஒரே குடும்பமாக எண்ணி நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து உலகத்தில் அமைதியும் இணைக்கவாழ்வும் நிலவ பாடுபடுவோம்.

உலக மக்கள் தொகை எண்ணுறு கோடியை தாண்டிவிட்டது.  இது 2050ஆம் ஆண்டில் 980 கோடியாகவும், 2100 ஆம் ஆண்டில் 1120 கோடியாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 12 விழுக்காட்டினர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். 2050ஆம் ஆண்டளவில் உலகளவில் சராசரி ஆயுட்காலம் 77.2 வயதை எட்டும். இன்றைய கணிப்புகளின்படி, உலகளவில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் வாழ்கின்றனர். உலக மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் வீடற்றவர்களாகவும், கூடுதலாக 20 விழுக்காட்டினர் போதிய வீட்டுவசதி இல்லாதவர்களாகவும் உள்ளனர்.

ஆயுள்கால விகிதம் அதிகரித்துவரும் சூழலில் குழந்தை பிறப்புகள் குறைந்துவருகின்றன. ஒரு குழந்தை இருந்தால் போதும், உடல்நலம் மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய முடியும் என்று இன்றைய தம்பதியர் எண்ணுகின்றனர். இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. இதே போக்கு, கூட்டுக் குடும்பங்களில் நிகழ்வதில்லை. ஏனெனில், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, தாத்தா பாட்டிகள், அத்தைகள், சித்தப்பாக்கள் பெரியப்பாக்கள் பாதுகாப்பாக இருந்தனர். குழந்தைகள் தவறுச் செய்யும்போது உரிமையுடன் கண்டித்தனர். அந்த கண்டிப்பையும் பெற்றோர் விரும்பினர். ஆனால் இதெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டன.

ஒரு குடும்பம் பிணைப்போடு இருக்க சகிப்புத்தன்மை அவசியம். ஒருவரின் பிழைகளை ஒருவர் சகித்து, அதை சுட்டிக் காட்டி தவறை உணர்த்தும்போது தான் அந்த தவறுகள் மாறுகின்றன. குடும்ப அமைப்பு இப்படி தான் இயங்கியது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் பொறுத்து கொள்வது குறைந்து வருகிறது.

அனைவரையும் நேரில் சந்தித்து மனம் விட்டு பேச வைக்கும் நாளை அனுசரிக்கவே உலக குடும்ப தினம் உருவாக்கப்பட்டது.  அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் பிரிந்து கிடக்கும் உறவுகள் இன்று ஒரு நாளிலாவது தமது வேரினை நினைவு கூர்ந்து அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூற வேண்டும்.

குடும்ப அமைப்பு தனிமனிதர்களின் தனிமையையும், வெறுமையையும் போக்கும். ஆனால் அதற்கு குடும்ப அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், ஒருவர் மற்றவர்களின் உணர்வை மதிக்கும் பண்பும் தேவை. கௌரவம், மற்றும் சமூகத்தின் மீதான அச்சம் காரணமாக குழந்தைகளின் ஆசைகளை, விருப்பங்களை காலில் இட்டு மிதித்தால் அவர்கள் குடும்பத்தை வெறுக்க நேரிடும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது தான் கூட்டுக் குடும்பத்தின் அடிப்படை சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தைச் சரியாக கடைப்பிடிப்பவர்களே இன்று வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவதைத் தவிர்ப்போம். எல்லா விடயங்களிலும் ஒருவரையொருவர் ஒப்புமைப்படுத்திப் பார்க்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களைப் பற்றி மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நம்பாமல் இருப்பது முக்கியம். விட்டுக் கொடுக்காமல் உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இருப்பது குடும்பத்தில் விரிசல்களை ஏற்படுத்தும். கண்களால் பார்க்கும் எந்த நிகழ்ச்சிகளையும் நமக்கு ஏற்றார்போல் புரிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களுடன் மரியாதை கொடுத்து இனிமையாகப் பேச வேண்டும். நல்ல வார்த்தைகள் ஒரு குடும்பத்தைப் பலப்படுத்தும். அடக்கம் நல்ல பண்பை வளர்க்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வெளிப்படையாகப் பேசி மனம் திறந்து வாழ வேண்டும். விரிசல்கள் ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களை மனம் திறந்து பேசி சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நாமே அந்த பேச்சைத் துவங்க முன்வர வேண்டும், அதுதான் நல்ல குடும்பத்தை வளர்க்கும். குடும்ப ஒற்றுமையை வேண்டுவோர் முதலில் சுயகௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை தூக்கியெறிவோம். நல்ல குடும்பங்களை உருவாக்கி அதன் வழி சமுதாயத்திற்கு தொண்டாற்றுவோம். உலகம் தானே மாறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2024, 13:25