ҽ

தங்கள் குழந்தைகளுடன் இரு அன்னைகள் தங்கள் குழந்தைகளுடன் இரு அன்னைகள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – உலக அன்னையர் தினம்

'இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார், தாயோ எல்லாமுமாக இருக்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

“அம்மா” என்ற சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம். அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல, அது அன்பின் தொடர் ஊற்று.

"தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.

'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாச்சாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது. அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுளாகிறார். இந்தக் கடவுளைப்பற்றித்தான், "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என அவ்வையார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழி நடத்திச் செல்லும் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில் மிளிர்ந்தாலும், அன்னைக்கு ஈடாக எதுவுமேயில்லை.

கூப்பிட்டக் குரலுக்கு தன்னால் ஓடி வர முடியாது என்ற காரணத்தால்தான், இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’ என்று சொல்வார்கள். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்றால், தாய் எல்லாமுமாக இருக்கிறார்.

அன்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும், நமக்கு முழு மனதோடு தரும் அன்னையின் உழைப்பையும் அன்பையும், தியாகத்தையும்  போற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு, வரும் ஞாயிறன்று, அதாவது மே மாதம் 12ஆம் தேதியில் இச்சிறப்புவாய்ந்த தினத்தை நாம் சிறப்பிக்க உள்ளோம்.

தமிழகத்திற்கும் அம்மாவுக்கும் ஆரம்பம் தொட்டே பெரும் பாசப்பிணைப்பு உண்டு. தமிழ் திரைப்படங்களில்தான் மற்ற எந்த மொழியை விடவும் அம்மா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டுள்ளதாம்.

அன்னையின் பெருமைப்பற்றிக் கூறும்போது, “அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது”, “குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர்தான் தாய்”, “தாய் எப்படி வளர்கின்றாரோ அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள்”, “அன்பின் உற்பத்தி தலம் அன்னை”, “தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை” என்றெல்லாம் அன்னையைப்பற்றி நிறையவேச் சொன்னாலும் அந்த அன்பின் விளக்கத்திற்கு முழுமையான நிறைவைத்தர முடியாது.

அன்னையர் தின வரலாறு

மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த அன்னா ஜார்விஸ் என்ற அமெரிக்க பெண்மணியால் 1908ல் அன்னையர் தினம் தொடங்கப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது பிறந்தார். அவரது தாயார், ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ், தனது சொந்த அனுபவங்களால் உந்தப்பட்டு, குழந்தை இறப்பைத் தடுக்க தாய்மார்களுக்கு சுகாதாரத்தை கற்பித்தல் போன்ற தாய்மையை மையமாகக் கொண்ட காரணங்களுக்காக தனது வாழ்க்கையைச் செலவிட்டார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவரது தியாகத்தையும் தங்களுக்கு தாய் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவரை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, மற்றும், வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப்பட வேண்டும், மற்றும், எல்லோர் இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. மாநில அரசு அங்கீகரித்தாலும் அன்னா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும், அந்நாளை அரசின் விடுமுறை நாளாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அரசுத்தலைவருக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார். இவரின் வேண்டுகோளையும், அதில் நியாயம் இருப்பதையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா அரசுத்தலைவர் உட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு, ஒவ்வோர் ஆண்டும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. அதாவது, அன்னாவின் தாய் இறந்த மே 9ஆம் தேதிக்கு அருகில் இருக்கும் என்று இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்பு கானடா அரசும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஏற்கனவே 1913லேயே அன்னா ஜார்விஸின் அன்னையர் தினத்தைப் பற்றிப் படித்த கான்ஸ்டன்ஸ் அடிலெய்ட் ஸ்மித், அமெரிக்க விடுமுறையை அங்கீகரிப்பதற்கு முன்னதாக இங்கிலாந்து தனது அன்னையர் ஞாயிறு தினத்தை புதுப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இவ்வாறு, அமெரிக்க அன்னையர் தினம் இங்கிலாந்திலும் பிரபலமாகியது. இரஷ்யாவிலும் அதன் சில அண்டை நாடுகளிலும், அன்னையர் தினம் பெரும்பாலும் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைக்கப்படுகிறது, இது உரிமைகள் இயக்கங்கள் மற்றும் பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்கான போராட்டத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. இவை தவிர, தாய்லாந்தில் அந்நாட்டு அரசி அன்னை சிரிகிட்டின் பிறந்த நாளான ஆகஸ்ட் 12 அன்று அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறித்து ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று பெருமளவு பூர்த்தியாகிவிட்டது என்றே கூறலாம். இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

தொன்மை வரலாறு

வரலாறு என்று மிகவும் பின்னோக்கிச் சென்றோமானால், 16ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் தான் அன்னையர் ஞாயிறு என்று முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. பண்டைய கிரேக்கத்தில், 'ரியா' என்ற கடவுளைத் தாயாக வழிபட்டனர். உரோமிலும், 'சிபெல்லா' என்ற பெண் கடவுளை, அன்னையாக தொழுதனர். நவீன அன்னையர் தினம் என்பது அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராப்டன் நகரில் 1908ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் மே மாதம் இரண்டாம் ஞாயிறில் சிறப்பிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு நாள்

அன்னையர் தினத்தில் நமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்கள் அனைவரையும் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவேண்டும், இதயபூர்மான நமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது என்பது, ஒருநாளுக்கு மட்டும் என்று ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. ஆனாலும், அன்னையர் தினம் என்பது அன்னையர்க்கு வழங்கப்படவேண்டிய உயரிய இடத்தை நினைவுறுத்தி நிற்கும் விழிப்புணர்வு நாளாகும்.  ஒவ்வோர் ஆண்டும் இது ஒரு துவக்கப்புள்ளிதான். ஆனால் அடுத்த ஆண்டு இதேநாள் வரை தொடரும் புள்ளி. சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். 'எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். உலகில் எதற்கும் ஈடு இணையற்றவர் ஒருவர் என்றால் அவர் அன்னை தான். அனைவருக்கும் அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. 280 நாட்கள் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

'அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்’ என, கவிஞர் ஒருவர் கூறியது மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது.

அன்னையர் தினம் என்ற பெயரால் ஆண்டில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த 'தாய்' என்ற உறவுக்கு நாம் பிரதிபலன் செய்திட இயலாது. 'தாய்' உறவு முறை என்பது வெறும் சடங்கோ சம்பிரதாயமோ அன்று, உணர்வுப் பூர்வமாக நாம் அணுகவேண்டிய உன்னதமான உறவு முறை. தாயை மதிப்போம், தரணியில் உயர் மதிப்பீடுகளை மலரச் செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2024, 15:18