ҽ

சஹேலில் சிறுவன் சஹேலில் சிறுவன் 

மத்திய சஹேலில் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் 70% அதிகரிப்பு!

அனைத்துலக சட்டத்தின் கீழ், அனைத்து வகையான வன்முறை, கொலை, குழந்தைகளை முறைகேட்டிற்கு ஆளாக்குதல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய சஹேலில் நடந்து வரும் நெருக்கடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் யுனிசெஃப் நிறுவனம் அழைக்கிறது : Gilles Fagninou

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆப்ரிக்காவின் மத்திய சஹேலில் நிகழும் வன்முறைகளால் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் 70 விழுக்காடு அதிகரித்துள்ள வேளை, அறிக்கையொன்றில் இதனைக் கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார் ஆபிரிக்காவிற்கான யுனிசெஃப் இயக்குனர் Gilles Fagninou.

2023-ஆம் ஆண்டின் இறுதி 3 மாதங்களில், மத்திய சஹேலில் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் முந்தைய 3 மாதங்களுடன் ஒப்பிடும்போது 70 விழுக்காட்டிற்கும் அதிமாக அதிகரித்துள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் Fagninou.

பெரும்பாலான வழக்குகளில் குழந்தைகளை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பயன்படுத்துதல், கொலைகள் மற்றும் சிதைவுகள் ஆகியவை அடங்கும் என்று எடுத்துக்காட்டியுள்ள Fagninou அவர்கள், இது முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 130 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் உரைத்துள்ளார்.

அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பொதுமக்களுக்கும், மோதல்களில் சிக்கியுள்ள சமூகங்களுக்கும் பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ள Fagninou அவர்கள், கொலைகள், கடத்தல்கள் மற்றும் ஆயுதக் குழுக்களின் ஆட்சேர்ப்பு உட்பட பல குழந்தைகள் உரிமை மீறல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

2024 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், மத்திய சஹேலில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் ஏறத்தாழ 1,400 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றும், இது அண்மைய ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வருவதுடன், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட இது 66 விழுக்காடு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார் Fagninou.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2024, 13:38