ҽ

மரணதண்டனைகள் நிறுத்தப்பட மரணதண்டனைகள் நிறுத்தப்பட 

2023ஆம் ஆண்டில் உலகில் அதிக அளவில் மரணதண்டனைகள்

2023ஆம் ஆண்டில் 16 நாடுகளில் 1153 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், இது 2022ஆம் ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2023ஆம் ஆண்டில் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த எட்டு ஆண்டுகளிலேயே மிக அதிகம் என கவலையை வெளியிட்டுள்ளது ஆம்னஸ்டி இண்டர்நேசனல் மனித உரிமைகள் அமைப்பு.

இந்த அமைப்பின் கூற்றுப்படி 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளில் 1153 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், இது 2022ஆம் ஆண்டைவிட  30 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் தொழில் நுட்பங்களும் மருத்துவக் கண்டுபிடிப்புகளும் அதிகரித்துவரும் நிலையில், மனித உரிமைகள் மதிக்கப்படுவது குறைந்துவருகிறது என்ற இம்மனித உரிமைகள் அமைப்பு, போர்கள், சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் பாராமுகம் என்ற நிலைகளுக்கிடையில், மரணதண்டனையையே குற்றத்திற்குரிய தண்டனையாக பல நாடுகள் இன்னும் கடைபிடிக்கின்றன என மேலும் தெரிவிக்கிறது.

மரதண்டனைச் சட்டங்கள், மனித வாழ்விற்கான மதிப்பு, சீர்திருத்த முறைகள், மனமாற்றம் மற்றும் மன்னிப்பை கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை எனவும் தெரிவிக்கிறது ஆம்னஸ்டி இண்டர்நேசனல் மனித உரிமைகள் அமைப்பு.

2023ஆம் ஆண்டின் மரணதண்டனை நிறைவேற்றல்களில் ஈரானும் சவுதி அரேபியாவும் முன்னணியில் இருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, வட கொரியா மற்றும் வியட்நாமில் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை எண்ணிக்கை குறித்து எவ்விவரமும் கிட்டவில்லை எனவும் தெரிவிக்கிறது.

உலகில் 144 நாடுகள் மரணதண்டனைச் சட்டத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டன எனக் கூறும் இவ்வமைப்பு, அதிக எண்ணிக்கையில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகளுள் முதல் ஐந்து இடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு வருவதையும், மியான்மார் நாட்டில் சட்ட விரோதமாக, இரகசியமாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2024, 14:15