பாகிஸ்தானிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆப்கன் குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானிய குழந்தைகள், வீட்டில் உணவு அல்லது கல்வி இல்லாமல் துயருறுவதாக Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ஆசிய செய்தி நிறுவனம்.
ஆப்கான் குழந்தைகள் குறித்து அண்மையில் வெளியான இவ்வமைப்பின் ஆய்வறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ள வேளை, பாகிஸ்தானிலிருந்து திரும்பியவர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பள்ளியில் சேராதவர்கள் என்றும் கூறுவதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கூற்றுப்படி, தலிபான்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்களின் கல்வியைத் தடைசெய்த பிறகு, பெரும்பாலான ஆண்களுக்குப் பள்ளியில் பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவிப்பதாக குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.
கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானின் வெளியேற்றும் கொள்கை தொடங்கியதில் இருந்து 5,20,000-க்கும் அதிகமான ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாக அண்மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 80 இலட்சம் குழந்தைகள், அல்லது மூன்றில் ஒருவர், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றும், ஏறக்குறைய ஆறு குடும்பங்களில் ஒன்று, கூடாரங்களில் வாழ்கிறது என்றும் அவ்வறிக்கை தெரிவிப்பதாக கூறும் அச்செய்தி நிறுவனம், அப்படி ஆப்கானுக்குத் திரும்பியவர்களில் யாருக்கும் அங்குப் போதுமான ஆதரவு வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறது,
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஆப்கானுக்கான Save the Children அமைப்பின் இயக்குநர் Arshad Malik அவர்கள், பாகிஸ்தானில் ஆவணமின்றி பிறந்த பல குழந்தைகளுக்குச் சொந்தமான வீடுகள் இல்லை என்றும், பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதைத் தவிர, 6,00,000 ஆப்கானியர்கள் கடந்த ஆண்டு ஈரானில் இருந்து வந்தனர் என்றும் கூறியுள்ளார். (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்