ҽ

உலகை பாதிக்கும் பிளாஸ்டிக் உலகை பாதிக்கும் பிளாஸ்டிக்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – ஏப்ரல் 22. உலக பூமி தினம்

மனிதனின் பேராசையோ, இயற்கையை அழித்து செயற்கைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியபோது, காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் திருடப்பட்டன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம் வாழ்க்கை நிகழ்வுகளில் அன்பிற்கு அர்த்தம் தேடிச்சென்றால் அது அன்னை என்றுதான் வரும். ஆம், அன்னைமடிதான் ஆறுதலின் இருப்பிடம். அதுபோல், நம் அனைவருக்கும் பொதுவான அன்பின், ஆறுதலின் மடி, பூமித்தாய்தான், அந்த தாய் மண்தான். பெற்றவள் தன் குழந்தைகளுக்குத்தான் தாய். ஆனால் பூமியோ நம் ஒவ்வொருவருக்கும் தாய். பாகுபாடின்றி நம்மை சுமப்பது தாய்மண்தான்.

நம் கண்முன்னாலேயே நாம் பார்ப்பதென்ன?. காலநிலை மாற்றங்கள், காடுமேடுகளின் வறட்சி, இதையெல்லாம் தாண்டி, நம் வாழ்க்கைக்கூட செயற்கையானதாக மாறிப்போச்சு. ஆதி மனிதன் காட்டில் மரங்கள் மேல் கூடுபோல் வீடு கட்டி வாழ்ந்தான். இன்றோ, வீட்டின் மேல் மாடித்தோட்டம் கட்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.

எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் என மார்தட்டிக்கொள்ளும் மனிதன், சுத்தமான காற்று, வற்றிடாத  தண்ணீர், நோயில்லா வாழ்க்கை என்பதற்கெல்லாம் வழிகண்டுவிட்டானா என்றால் அதற்கெல்லாம் விடையில்லை. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. இப்படியே நாம் தொடரமுடியாது என உலகம் உணர்ந்து வருகிறது. இயற்கையை, இந்த உலகை நாம் பாதுகாக்கவேண்டும், நம் வருங்காலத் தலைமுறையினர்க்குரிய நம் கடமைகளை நாம் ஆற்றவேண்டும் என்ற விழிப்புணர்வின் பதிலாகத்தான் இம்மாதம் 22ஆம் தேதியை, அதாவது திங்கள்கிழமையை, உலக பூமி தினமாக சிறப்பிக்கின்றோம். இவ்வாண்டு பூமி தினத்திற்கான தலைப்பாக, பூமிக்கு எதிராக பிளாஸ்டிக் என்பது எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிளாஸ்டிக் பயன்பாட்டை 2040ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு குறைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்கு இயைந்ததாக இது உள்ளது.   

ஒவ்வொரு சிறப்பு நாளுக்குப் பின்னும் ஒரு வரலாறு இருப்பதுபோல், உலக பூமி நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாந்தா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அதேவேளை, சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல். உலக அமைதிக்காகக் குரல்கொடுத்துவந்த அவர், மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் உருவாகின. 1970ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென கடலோரமாகவே ஊர்வலம் சென்றனர்.

மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்திவருகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லிய அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர் `கேலார்டு நெல்சன்’ என்பவர். இந்தப் பேரணியைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதியை உலகப் புவி தினமாக பல நாடுகள் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கத் துவங்கின.  1990ஆம் ஆண்டிற்குள் 140 நாடுகளுக்கு மேல் இந்த நாளைச் சிறப்பிக்கத் துவங்கின. இன்று 175க்கும் மேற்பட்ட நாடுகள் உலக பூமி நாளை ஏப்ரல் 22 அன்று சிறப்பிக்கின்றன. இது தவிர, சூன் 5ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் நாளாக சிறப்பிக்கப்படுகிறது.

ஏறக்குறைய 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமியை, எந்த மனிதனும் திட்டம் போட்டு உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. பூமியின் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பகுதியை நீர் சூழ்ந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் முக்கால்வாசி பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது, மற்றும் பூமியின் மொத்த நீரில் 97 விழுக்காடு கடல்களில் உப்பு நீராக உள்ளது. இது தவிர, பூமியின்  90 விழுக்காடு தூய்மையான நீர் பனிக்கட்டியில் அடைக்கப்பட்டுள்ளது.

காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம், இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள்,  மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி. ஆனால், அண்மை ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டேச் செல்லலாம். இன்று நம் பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம். இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும், இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும், பெரிய தீமையையும் கொண்டிருக்கும் என்பதை உணராமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை. நமது பயன்பாடும், வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. "பயன்படுத்தியபின் தூக்கி எறி" கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது. இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு "உலக பூமி தினம்" என்று ஒரு நாள் தேவைப்படுவதுதான் வேடிக்கை.

இன்று நிலம், நீர், காற்று மாசு அதாவது சுற்றுச்சூழல் மாசுபடுதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று காண்பதற்கு அரிதாகிப் போனது. 2050ஆம் ஆண்டிற்குள் ஐம்பது விழுக்காட்டு உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும் என்ற தகவல் மிகவும் வேதனை தருகிறது.

புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஓர் ஆராய்ச்சியின்போது, “தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும்” என்று மேற்கோள்காட்டி கூறியுள்ளார். அதிகமான பூச்சி கொல்லி உபயோகம், மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களை கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேனீக்கள் அழிந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். இந்நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் மனிதனும் அழியும் விலங்கினங்கள் பட்டியலில் நிச்சயம் சேர்ந்துவிடுவான் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத உயிரினங்களுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வரும் பூமியைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாகவும் சிந்திப்பதற்கு நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.

முன்பெல்லாம் மனிதன் வெளியிடக்கூடிய கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு ஆக்ஸிஜனை கொடுக்கும் வகையில் ஏராளமான மரங்களும் தாவரங்களும் இருந்தன. இவற்றால், ஓர் இயற்கை சமநிலை தொடரப்பட்டு வந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல, காடுகளை அழித்தல், தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம், செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இவை, பூமியில் இருந்து 15 முதல் 60 கி.மீ. உயரத்தில் உள்ளதும், சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்கும் ஓசோன் படலத்தை தாக்குகின்றன. இதனால், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, தோல் புற்றுநோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும். இயற்கை வளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால், பருவமழை பொய்த்துப் போவதும், அதனால் தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பஞ்சம் ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வேளாண் பொருள் உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், வயல்வெளிகள் தொழிற்சாலைகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப்படுவதையும், வறட்சி உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பெரும் துயர்களுக்கு முகங் கொடுப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இயற்கையும், எதிர்காலமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. இயற்கையை மாசுபடுத்தி, அதை சிறுக சிறுக சிதைத்தால் நமது எதிர்காலம் உறுதியாக பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும். குழந்தைகளையும் மதிப்பெண் கல்வியை நோக்கியே வளர்ப்பதால் அவர்களுக்கும், இயற்கையை பற்றி பெரிய ஆர்வம், அறிவு ஏற்படவில்லை.

இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும். இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது. உணர்வோம். உடனடி செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2024, 13:56