ҽ

இறந்த குழந்தைகளுக்காக வருந்தும் உற்றார் இறந்த குழந்தைகளுக்காக வருந்தும் உற்றார்  (AFP or licensors)

குழந்தைகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் துயரமான மற்றும் கொடிய வன்முறைச்சூழலில் சிக்கித் தவிக்கின்றனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடந்த 72 மணி நேரத்தில் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் 3 குழந்தைகளும் ராஃபாவில் 14 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறு கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு.

ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட யுனிசெஃப் அறிக்கையில் போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றிய தகவல்களை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவிற்கான யுனிசெஃப் மண்டல இயக்குனர் அதேலே கோடர்.

நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் துயரமான மற்றும் கொடிய வன்முறைச் சூழலில் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், இப்போரானது கணக்கிலடங்காத வகையில் குழந்தைகளைப் பாதிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் அதேலே.

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள துல்கரேமில் அண்மையில் ஏற்பட்ட இராணுவச் செயல்பாடுகளால், பாலஸ்தீனத்தை சார்ந்த மூன்று குழந்தைகளும், ராஃபாவைச் சார்ந்த ஏறக்குறைய 14 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் இன் டுவிட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார் அதேலே கோடர்.

குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் இப்போர் நிறுத்தப்படவேண்டும் என்றும், உடனடி போர் நிறுத்தம் மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் கோடர்.

2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினால் இறந்த, காயம்பட்ட மற்றும் ஊனமுற்ற 47,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அணு ஆயுதங்களால் ஏற்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப்.

துப்பாக்கிச் சூடு, பிற ஆயுதங்களால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட வெடிகுண்டு ஆயுதங்களால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை  இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2024, 10:31