ҽ

ஆயுத பயன்பாடும் அதிகரித்து வருகிறது ஆயுத பயன்பாடும் அதிகரித்து வருகிறது  (ANSA)

கடந்த 5 ஆண்டுகளில் கிழக்கிற்கான ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளது

உலகில் ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதிச் செய்யும் முதல் 10 நாடுகளில் ஆறு ஆசியாவில் உள்ளன. அவை இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் சைனா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த ஐந்தாண்டுகளில் உலகில் இடம்பெற்றுவரும் ஆயுத பரிமாற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்வீடனின் SIPRI அமைப்பு, ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆசியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கியதில் கடந்த 25 ஆண்டுகளிலேயே அமெரிக்க ஐக்கிய நாடு முதன் முறையாக முதலிடத்தில் வந்துள்ளதாகவும் கூறும் SIPRIயின் அறிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் கிழக்கு நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனமான SIPRI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019க்கும் 2023க்கும் இடைப்பட்டக் காலத்தில் உலக ஆயுதங்களின் இறக்குமதியில் 37 விழுக்காட்டை ஆசியா மற்றும் ஒசியானியா நாடுகளும், 30 விழுக்காட்டை மத்திய கிழக்கு நாடுகளும், 21 விழுக்காட்டை ஐரோப்பாவும், 5.7 விழுக்காட்டை அமெரிக்கக் கண்டமும், 4.3 விழுக்காட்டை ஆப்ரிக்காவும் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதிச் செய்யும் முதல் 10 நாடுகளில் ஆறு ஆசியாவில் இருப்பதாகவும், அவை இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் சைனா எனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சைனாவின் ஆயுதச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளபோதிலும், அதன் ஆயுத இறக்குமதி குறைந்துள்ளது, ஏனெனில் உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புகளில் அது கவனம் செலுத்தி வருகிறது எனவும் SIPRIயின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

சைனா மற்றும் பாகிஸ்தானுடன் ஆன பதட்ட நிலைகளால் 2014 முதல் 2018ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்திய ஆயுத இறக்குமதி 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உரைக்கும் இவ்வமைப்பு, உலக மொத்த ஆயுத இறக்குமதியில் 9.8 விழுக்காட்டைக் கொண்டு இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2024, 13:52