ҽ

தெற்கு காசா பகுதியை சார்ந்த சிறுமி தெற்கு காசா பகுதியை சார்ந்த சிறுமி   (AFP or licensors)

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

ஊட்டச்சத்துக் குறைபாடு பரிசோதனைகளின்படி 16 விழுக்காட்டினர் அதாவது 2 வயதிற்குட்பட்ட சிறாரில், ஆறில் ஒருவர் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வடக்கு காசா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏறக்குறைய பத்து சிறார் இறந்துள்ளனர் என்றும், இன்னும் அதிகமான சிறார் காசா பகுதியில் எந்த சிகிச்சையும் பெற முடியாமல் துன்புறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் இயக்குனர் Adele Khodr.

மார்ச் 3 ஞாயிற்றுக்கிழமை காசாவின் வடக்குப் பகுதியில் பாதிக்கப்படும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான யுனிசெஃப் மண்டல இயக்குனர் அதேலே கோடர்.

மனிதனால் ஏற்படக்கூடிய கொடூரமான இத்தகைய மரணங்கள் கணக்கிடப்படக்கூடிய வகையில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும், உலகின் கண்களுக்கு முன்பாக மெதுவாக அதிகரிக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையானது மிகவும் வருந்தத்தக்கது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அதேலே.

கடந்த ஜனவரி மாதம் வடக்கு காசாவில் யுனிசெஃப் மற்றும் WFP நடத்திய ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பரிசோதனைகளின்படி 16 விழுக்காட்டினர் அதாவது 2 வயதிற்குட்பட்ட சிறாரில், ஆறில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்படும் தெற்கு இராஃபாவில் 2 வயதுக்குட்பட்ட சிறார் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான நெருக்கடியை மாற்றியமைத்தல், உணவுப்பஞ்சத்தைத் தடுத்தல், குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுதல் போன்ற பணிகளைச் செய்து வரும் UNICEF எனப்படும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், வடக்கு காசா உட்பட அனைத்துப் பகுதிகளிலும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கான தடையற்ற வழிகள், பாதுகாப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் அதேலே.

மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரிக்கும் போது இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கடந்த அக்டோபர் மாத அறிக்கையில் யுனிசெஃப் ஏற்கனவே எச்சரித்ததாகத் தெரிவித்துள்ள அதேலே அவர்கள், அதன்படியே இப்போது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2024, 11:53