ҽ

ஆசியக் குழந்தைகள் (கோப்புப் படம்) ஆசியக் குழந்தைகள் (கோப்புப் படம்)  (AFP or licensors)

குழந்தைகளை பராமரிப்பதில் மிகப்பெரும் சவால் உள்ளது!

குழந்தைகளைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அது சமமாக இல்லை. குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் பின்தங்கியுள்ளனர் : Regina De Dominicis

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஏறக்குறைய 4,56,000 குழந்தைகள் பெரிய நிறுவனங்கள் உட்பட பராமரிப்பு வசதிகளில் வாழ்கின்றனர் என்று ஜனவரி 19, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள புதிய அறிகையொன்றில் தெரிவித்துள்ளது UNICEF நிறுவனம்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான UNICEF நிறுவனத்தின் மண்டல இயக்குனர் Regina De Dominicis அவர்கள், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் குழந்தைகளை நிறுவனமயமாக்கும் நீண்ட மற்றும் வலிமிகுந்த பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அது சமமாக இல்லை என்றும்,  குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் பின்தங்கியுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் Regina.

"சிறந்த பாதுகாப்பிற்கான பாதைகள்: ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் மாற்றுப் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் நிலைமையை ஆய்வு செய்தல்"  என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் மாற்றுப் பராமரிப்பில் வாழும் குழந்தைகளின் விழுக்காட்டு விகிதம் உலக சராசரியை விட இரு மடங்காகும் என்று தெரிவிக்கும் அவ்வமைப்பு, உலகளவில் 1,00,000-க்கு 105 குழந்தைகளுடன் ஒப்பிடும்போது 1,00,000 குழந்தைகளில் 232 பேர் வளர்ப்புப் பராமரிப்பில் வாழ்கின்றனர் என்றும், 2017-இல் இத்தாலியில் 1,00,000 க்கு 130 பேர் இருந்தனர், அதேவேளையில் குடும்ப வளர்ப்பில் இருப்பவர்கள் 1,00,000 க்கு 144 பேர் என்றும் கூறுகிறது.

மேற்கு ஐரோப்பாவில் பராமரிப்பு வசதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை 1,00,000க்கு 294 என்ற விகிதத்தில் அதிகமாக உள்ளது என்றும், இது உலக சராசரியை விட ஏறக்குறைய  மூன்று மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டும் அவ்வறிக்கை, மேற்கு ஐரோப்பாவில் உள்ள வசதிகள் சிறியதாகவும், சமூகக் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்தாலும், குடும்ப அடிப்படையிலான கவனிப்பைக் காட்டிலும் குடியிருப்புகளின் அதிகப்படியான பயன்பாடு இன்னும் உள்ளது என்றும் எடுத்துரைக்கிறது.

அண்மைய ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு வந்துள்ள ஆதரவற்ற சிறார்களின் அதிகரிப்பு மற்றும் இளம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அதிகரிப்புமே ஐரோப்பாவில் பராமரிப்பு வசதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்விற்குக் காரணமாகும் என்று மேலும் சுட்டுகிறது அவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2024, 15:40