ҽ

யுனிசெஃப் பொதுஇயக்குனர் கேத்தரின் ரூசெல். யுனிசெஃப் பொதுஇயக்குனர் கேத்தரின் ரூசெல்.  (ANSA)

அமைதியை, சிறந்த எதிர்காலத்தை பெறத் தகுதியானவர்கள் குழந்தைகள்

வன்முறையின் அளவு அதிகரித்தால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுவார்கள், காயமடைவார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தின் கீழ் சிறார் பாதுகாக்கப்படுதல், அவர்களுக்கு உதவி அளிக்கப்படுதல் போன்றவற்றை உறுதி செய்ய அனைத்து தரப்பினருக்கும் அழைப்புவிடுப்பதாகவும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் அனைத்து குழந்தைகளும் அமைதி மற்றும் சிறந்த எதிர்காலத்தை பெறுவதற்கான நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார் யுனிசெஃப் பொதுஇயக்குனர் கேத்தரின் ரூசெல்.

கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் நடைபெற்று சிறார் நம்பிக்கையுடன் எதிர்கால வாழ்வைக் கனவு காணும் நேரத்தில் காசாவில் மீண்டும் வன்முறைச்செயல்கள் ஆரம்பித்துள்ளது என்றும், இதனால் சிறாரின் வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்தி டிசம்பர் 2 சனிக்கிழமை வெளியிட்ட தகவல்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் யுனிசெஃப் பொதுஇயக்குனர் கேத்தரின் ரூசெல்.

குழந்தைகள் வாழ்வதற்கான உலகின் மிக ஆபத்தான இடமாக காசா பகுதி மாறியுள்ளது என்றும், வன்முறைச் செயல்கள் ஏதுமின்றி ஏழு நாட்கள் இருந்த நிலையில் காசாவில் சண்டை மீண்டும் தொடங்கியுள்ளது, இதன் விளைவாக குழந்தைகள் அதிகமாக இறக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார் ரூசெல்.

48 நாட்கள் இடைவிடாத ஷெல் தாக்குதலினால் 5,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் எண்ணிக்கையில் வெளிப்படாத பல குழந்தைகள் காணவில்லை என்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் ரூசெல்.

வன்முறையின் அளவு அதிகரித்தால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுவார்கள், காயமடைவார்கள் என்று எடுத்துரைத்துள்ள ரூசெல் அவர்கள், தேவையிலிருப்பவர்களுக்கு நீர், உணவு, மருந்துப் பொருட்கள், போர்வைகள், குளிர் போக்கும் ஆடைகள் ஆகியவற்றைக் கொடுக்க முடியாவிட்டால், மனிதாபிமானப் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

காஸாவில் பிணையக் கைதிகளாக இருந்த 30க்கும் மேற்பட்ட சிறார் விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும், மனிதாபிமான இடைநிறுத்தம் காசா பகுதி முழுவதும் அடிப்படை உதவிகளை வழங்குவதை அதிகரிக்க அனுமதித்துள்ளது என்றும் கூறியுள்ளார் ரூசெல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2023, 10:23