ҽ

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது வழங்கும் விழா 2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது வழங்கும் விழா  

2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் 'உலக மத்திய சமையலறை’ (World Central Kitchen) என்ற உணவு உதவி அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் 'உலக மத்திய சமையலறை’ என்ற உணவு உதவி அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை மாலை, அபுதாபி நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) நிறுவுனர் சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அவர்களின் நினைவிடத்தில் (Founder’s Memorial) இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மனித உடன்பிறந்த உணர்வு நிலை குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏடு, திருத்தந்தைக்கும் Al-Azhar தலைமைக் குருவுக்கும் இடையே 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலை சயத் விருது, தற்போது ஆறாவது ஆண்டாக வழங்கப்பட்டுள்ளது.

'பகிரப்பட்ட மனிதநேயம்'

இவ்விருது வழங்கும் விழாவில், முதலில் உரையாற்றிய பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி அவர்கள், மக்கள் மற்றும் கோள்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும், மனித வளர்ச்சி நலமான சூழலை எவ்வாறு நம்பியுள்ளது என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.

அடுத்து, உரைநிகழ்த்திய 'உலக மத்திய சமையலறை' என்ற உணவு உதவி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி எரின் கோர் அவர்கள், மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு, குறிப்பாக காசாவில், அக்டோபர் 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 10 கோடி மக்களுக்கு  உணவுகளை வழங்குவதில் இவ்வமைப்பின் முயற்சிகளைப் பற்றி உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.

இறுதியாக, 15 வயது நிரம்பிய இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே, எத்தியோப்பியாவில் மருத்துவமனை கட்டுவது உட்பட தனது திட்டங்களை இன்னும் மேம்படுத்த தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிசுத் தொகையைப் பயன்படுத்தப் போவதாக நம்பிக்கையுடன் கூறினார். இவர் ஆரம்ப கட்ட தோல் புற்றுநோயைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் ஒரு சோப்பை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பீடம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான திருப்பீடத்தூதர் பேராயர் கிறிஸ்டோஃபே எல்-காசிஸ் அவர்கள், 2007-ஆம் ஆண்டில் தொடங்கிய ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் திருப்பீடத்திற்கு  இடையேயான வலுவான தூதரக உறவுகள் குறித்து வத்திக்கான் செய்தி நிறுவனத்திடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மனித உடன்பிறந்த நிலை உறுதி ஆவணத்தை ஆதரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கை எடுத்துரைத்த பேராயர், உலகளவில் மனித உடன்பிறந்த நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

தனது நேர்காணலில், சயத் விருது குறித்தும் பாராட்டியுள்ள பேராயர் எல்-காசிஸ் அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பெரிய இமாம் இடையேயான ஒத்துழைப்பை மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று அழைத்ததுடன், "நாம் அனைவரும் ஒரே குடும்பம்" என்பதை உலகிற்கு நினைவூட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 பிப்ரவரி 2025, 15:03