ҽ

கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலக விழா சிறப்புத் திருப்பலி

இன்னிசை நிகழ்ச்சிகள் பெருங்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கலைஞர்கள் தங்களது உணர்வுகளையும் அனுபவங்களையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா சிறப்புத் திருப்பலியானது, பிப்ரவரி16, ஞாயிற்றுக்கிழமை, உரோம் உள்ளுர் நேரம் காலை 10.00 மணியளவில், இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணியளவில், கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino de Mendonça அவர்கள் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக கர்தினால் José Tolentino அவர்கள் திருப்பலி நிறைவேற்றி திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களைக் கலைஞர்களுக்கு எடுத்துரைத்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கலைஞர்கள் இவ்விழாவைச் சிறப்பிக்க உரோம் நகரில் ஒன்று கூடினர். கலைஞர்களுக்கான இத்திருப்பலியின் முதலாம் மற்றும் இரண்டாம் வாசகமானது இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட்டது. பதிலுரைப்பாடலானது, சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. நம்பிக்கையாளார் மன்றாட்டுக்களானது திருத்தொண்டர் ஒருவரால் எடுத்துரைக்கப்பட்டது.

திருப்பலியின் நிறைவில் கலைஞர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் கர்தினால் José Tolentino de Mendonça.

பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை இரவு, கலைஞர்கள் தூய பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவு வழியாக திருப்பயணிகளாக பெருங்கோவிலில் நுழைந்து செபித்தனர். நள்ளிரவு இன்னிசை நிகழ்ச்சிகள் பெருங்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கலைஞர்கள் தங்களது உணர்வுகளையும் அனுபவங்களையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 பிப்ரவரி 2025, 12:38