ҽ

USAID நிறுவனத்தின் முன்பாக, அது இறந்ததாக அறிவிப்பு USAID நிறுவனத்தின் முன்பாக, அது இறந்ததாக அறிவிப்பு  (ANSA)

அமெரிக்க உதவி குறைப்புகள் ஏழைகளின் வாழ்வை அச்சுறுத்துகிறது

வெளிநாடுகளுக்கான வளர்ச்சித்திட்ட உதவிகளை குறைக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முடிவு, பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமையும் ஆபத்து உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மனிதாபிமான மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவித் தொகைகள் நிறுத்தப்படுவதற்கான முடிவால் பல இலட்சக்கணக்கான மக்கள் துயர்களுக்கு உள்ளாவார்கள் என்ற கவலையை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான பன்னாட்டு காரித்தாஸ்.

200க்கும் மேற்பட்ட நாடுகளில் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, வெளிநாடுகளுக்கான வளர்ச்சித்திட்ட உதவிகளை குறைக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முடிவு, பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளதோடு, பல இலட்சக்கணக்கான மக்களை மிகப்பெரிய அளவிலான ஏழ்மைக்குத் தள்ளுவதற்கும் காரணமாக இருக்கும் என கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 120 நாடுகளில் ஏழைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் என ஒவ்வோர் ஆண்டும் 4000 கோடி டாலர்களைக் கொண்டு உதவி வந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு அமைப்பின் உதவிகள் தற்போது நிறுத்தப்பட, அல்லது குறைக்கப்பட உள்ளது, பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும் மாண்பையும் அச்சுறுத்துவதாக உள்ளது என மேலும் உரைத்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

உலகின் மனிதாபிமான உதவிகளுக்கான தொகையில் 40 விழுக்காட்டை அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிவந்த நிலையில், தற்போது நிதியுதவிகளை குறைக்க உள்ளது, ஏழை நாடுகளுக்கான உதவித்திட்டங்களை மறுபரிசீலனைச் செய்ய உதவி அமைப்புக்களைத் தள்ளியுள்ளது எனவும் உரைக்கிறது காரித்தாஸ் அமைப்பு.

மேற்கு ஆப்ரிக்காவில் 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருந்துக்கள் இல்லா நிலையும், சூடான் நாட்டில் ஏழரை இலட்சம் மக்களுக்கு உணவு இல்லா நிலையும் சிரியாவின் அகதிகளுக்கு உணவு பற்றாக்குறையும் உருவாகும் ஆபத்து இருப்பதாகக் கூறும் பன்னாட்டு காரித்தாஸ் அமைப்பு, பல இலட்சக்கணக்கான மக்களுக்கு இதனால் நல பாதிப்புக்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 பிப்ரவரி 2025, 13:56