இலபனோன் நாட்டு இளையோருடன் கர்தினால் செர்னி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இலபனோன் போன்று அதே சவால்களை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளுக்கு நம்பிக்கையை வழங்குபவர்களாகவும், இருளில் ஒளிவிடுபவர்களாகவும் இலபனோன் நாட்டு இளையோர் விளங்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் கர்தினால் மைக்கல் செர்னி.
இம்மாதம் 19 முதல் 23 வரை இலபனோன் நாட்டு ஆயர்களுக்கு திருஅவையின் நெருக்கத்தை தெரிவிக்கவும், தலத்திருஅவையின் முயற்சிகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கவும் பயணம் மேற்கொண்டுவரும், ஒருங்கிணைந்த மனிதகுல மேம்பாட்டுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் செர்னி அவர்கள், பல பிரச்னைகளுக்கு மூல காரணமே அவைகளை நாம் நிர்வகிக்கும் முறையே என்று இளையோருடன் ஆன சந்திப்பின்போது கூறியதுடன், இப்பிரச்னைகளை சமாளிப்பதற்கான சிறந்த வழி உடன்பிறந்த உணர்வைக் கொண்டிருப்பதே எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் சகோதரத்துவ உணர்வில் வாழும்போது நல்ல தலைவர்களாக செயல்படமுடியும் என்பதை வலியுறுத்திய கர்தினால் செர்னி அவர்கள், எந்த ஒரு பிரச்சனைக்கும் இரு வித தீர்வுகள் உள்ளன, அவை இறைவேண்டலும் பணியுமேயாகும் எனவும் கூறினார்.
புனித இக்னேசியஸின் படிப்பினைகளால் தூண்டப்பட்டவர்களாக, அனைத்தும் இறைவனைச் சார்ந்துள்ளது என்பதுபோல் நம் செபம் இருக்க வேண்டும் எனவும், அதேவேளை நாம் ஆற்றும் பணிகளோ அனைத்தும் நம்மைச் சார்ந்து இருப்பதுபோல் இருக்க வேண்டும் எனவும் இளையோரிடம் கேட்டுக்கொண்டார் கர்தினால் செர்னி.
மாரோனைட் கத்தோலிக்க முதுபெரும்தந்தை, கர்தினால் Béchara Boutros Raï அவர்களையும், இலபனோன் கத்தோலிக்க ஆயர் பேரவையையும் சந்தித்த கர்தினால் செர்னி அவர்கள், அந்நாட்டில் புதைக்கப்பட்டுள்ள முன்னாள் இயேசு சபை அதிபர் அருள்பணி Peter Hans Kolvenbach அவர்களின் கல்லறையையும் சென்று சந்தித்தார்.
முன்னாள் அதிபர் கோல்வன்பாக் அவர்களின் சமூக அப்போஸ்தலிக்க விடயங்களில் செயலராக 11 ஆண்டுகள் கர்தினால் செர்னி அவர்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்