வத்திக்கானில் உலக சமூகத் தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
2025ஆம் ஆண்டு யூபிலியை முன்னிட்டு ஜனவரி மாதம் 24 வெள்ளிக்கிழமை முதல் 26 ஞாயிற்றுக்கிழமை வரை உலக சமூகத் தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலியானது வத்திக்கானில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் ஏறக்குறைய 60 இடங்களிலிருந்து ஏராளமான இளம் பத்திரிக்கையாளர்கள், பொறுப்பளர்கள் அமைப்பின் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என ஏறக்குறைய 10,000 பேர் உரோம் நகரில் கூடியிருக்கின்றனர்.
எதிர்நோக்கு என்பது மாயையோ அல்லது மிகக்குறுகிய ஒன்றோ அல்ல மாறாக, "எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள் என எந்த வழியிலும் நாம் சொல்லும் விஷயங்கள் எங்காவது சென்று படிப்பவர்கள், கேட்பவர்கள் மற்றும் பார்ப்பவர்களுடன் உறவை உருவாக்குகின்றன என்று நம்புவதற்கு நம் ஒவ்வொருவரையும் தூண்டும் உந்துதல் என்று உலக சமூகத்தொடர்பாளர்களுக்கான யூபிலியின் துவக்க நாளின்போது கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி.
நல்ல தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கையின் செய்திகளைப் பகிர்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி திருத்தந்தை அடிக்கடி வலியுறுத்துகின்றார் என்று வலியுறுத்திய ருபினி அவர்கள், மக்கள் தங்களைத் தனிமையாக உணர்வதைக் குறைத்தல், குரலற்றவர்களுக்குக் குரல் கொடுத்தல், உண்மையாக தகவல்களைப் பரப்ப அவர்களைப் பயிற்றுவித்தல் என்னும் மூன்று பண்புகளைத் தகவல் தொடர்பாளர்கள் கொண்டிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சனவரி 23 வியாழனன்று வத்திக்கான் நூலக அலுவலகத்தில் பெண் துறவற தகவல் தொடர்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், 24 வெள்ளிக்கிழமை மாலை தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் யூபிலி ஆண்டில் நிறைபலன் பெற வேண்டி பாவமன்னிப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து கத்தோலிக்க சமூகத்தொடர்பாளார்களின் பாதுகாவலரான தூய பிரான்சிஸ் தே சேல்ஸ் அவர்களின் திருப்பலியும் நடைபெற்றது.
திருப்பலியில் உலகின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான சமூகத்தொடர்பாளர்களும், திருப்பயணிகளும் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக 25 சனிக்கிழமை காலை தூய பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக தகவல் தொடர்ப்புப் பணியாளர்கள் கடந்து சென்றனர். அதன்பின் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து தங்களது மகிழ்வினை வெளிப்படுத்தினர்.
இதன் நிறைவு விழாவாக சனவரி 26 ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை ஞாயிறை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உலக சமூகத்தொடர்பாளர்களுக்கான திருப்பலியினை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்க இருக்கின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்