ҽ

கர்தினால் Claudio Gugerotti கர்தினால் Claudio Gugerotti   (ANSA)

சிரியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் கர்தினால் Claudio Gugerotti

திருத்தந்தையின் ஒன்றிப்பையும் உடனிருப்பையும் உறுதிப்படுத்தவும், அவரது ஆதரவை வழங்கவும் சிரியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் கீழை வழிபாட்டுத் திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Claudio Gugerotti

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிரியா நாட்டின் கத்தோலிக்கச் சமூகத்திற்கு ஆதரவை வழங்குவதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியின் ஒரு பகுதியாக, கீழைவழிபாட்டுத் திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Claudio Gugerotti அவர்கள், ஜனவரி 24 முதல் 29 வரை சிரியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

சிரியாவில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் திருத்தந்தையின் ஒன்றிப்பையும் அன்பையும் வெளிப்படுத்துவதன் நோக்கமாகவே கதினால் Gugerotti  அவர்களின் இந்தப் பயணம் அமைந்துளளது.

மேலும் கர்தினால் Gugerotti  அவர்களுடன் பேராயர் Michel Jalakh மற்றும் அருள்பணியாளர் Emanuel Sabadakh இருவரும் உடன்பயணிக்கின்றனர்.

கர்தினால் Gugerotti அவர்கள், சிரியாவுக்கான திருப்பீடத் தூதர் கர்தினால் மரியோ ஜெனாரி அவர்களுடன் இணைந்து கிரேக்க-மெல்கியர், மாரோனியர், கல்தேயர், சிரியன், ஆர்மேனியன் மற்றும் இலத்தீன் திருஅவைகள் உட்பட சிரியாவில் உள்ள பல்வேறு கத்தோலிக்கச் சமூகங்களுக்குச் சென்று அவர்களைச் சந்திக்கின்றார்.

தமஸ்கஸ் மற்றும் அலெப்போவில், தலத்திருஅவையின் கத்தோலிக்கச் சமூகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்கும் கர்தினால் Gugerotti அவர்கள், ஹோம்ஸ் நகரில் நடைபெறும் கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.

கூடுதலாக, திருத்தந்தையின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்கள், முதுபெரும் தந்தை இரண்டாம் மோர் இக்னேஷியஸ் அஃப்ரெம் மற்றும் ஜான் எக்ஸ் இருவரையும் சந்தித்து உரையாடுகிறார் கர்தினால் Gugerotti.

ஜனவரி 25-ஆம் தேதி, சிரியாவில் உள்ள புனித பவுலின் நினைவிடத்தில் நிகழும் திருப்பலிக்குத் தலைமையேற்கிறார் கர்தினால் Gugerotti. இது புனித பவுலின் மனமாற்றம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான இறைவேண்டல் வாரத்தின் இறுதி நாளாக அமைகிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2025, 14:23