ҽ

அருளாளர் பட்ட திருபலியின்போது கர்தினால் மர்செல்லோ செமராரோ அருளாளர் பட்ட திருபலியின்போது கர்தினால் மர்செல்லோ செமராரோ 

செப ஆசிரியரான இயேசுவைப் பின்பற்றியவர் அருளாளர் Giovanni Merlini

அருளாளர் ஜொவான்னி மெர்லினோ சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்டவர், எல்லாருடனும் நட்புறவு கொள்பவர், ஆலோசனை வழங்குபவர், துன்பத்தில் இருக்கும் மக்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவுபவர் - கர்தினால் செமராரோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசு எல்லா நிலைகளிலும் செபித்தார், கெத்சமேனி தோட்டத்திலும், சிலுவையிலும், சீடர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும், அவர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுக்கும்போதும் செபித்தார் என்றும், செபத்தின் ஆசிரியராக இருந்த இத்தகைய இயேசுவை பின்பற்றியவரே அருளாளர் Giovanni Merlini என்றும் கூறினார் கர்தினால் மர்செல்லோ செமராரோ

சனவரி 12 ஞாயிற்றுக்கிழமை உரோம் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் இறைஊழியர் Giovanni Merlini அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.

மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் என்ற இறைவார்த்தைகள், இயேசுவிற்கு செபம் என்பது பழக்கப்பட்ட ஒன்று என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், முதன்மை பெறும் இடமாக, வாழ்வின் மறைபொருளை வாழும் இடமாக, இறைத்தந்தையுடனும் சீடர்களுடனும் உறவு கொள்ளும் இடமாக இயேசுவிற்கு செபம் இருக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.

செலானோவைச் சேர்ந்த தாமஸ் புனித பிரான்சிஸைப் பற்றி எழுதிய வரிகளான “அவர் ஒரு செப மனிதர்” என்ற வார்த்தைகள் அருளாளர் Giovanni Merlini அவர்களுக்குப் பொருந்தும் என்று எடுத்துரைத்த கர்தினால் செமராரொ அவர்கள், சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட மனிதராகவும், தலைப்பண்பு, பொறுப்புணர்வு, ஆலோசனை வழங்கும் திறன் பெற்றவராகவும் அவர் விளங்கினார் என்றும் எடுத்துரைத்தார்.

துன்புறும் மக்களுக்கு தொண்டுப்பணிகள் வழியாக உதவிகள் பல செய்தவர் அருளாளர் மெர்லினி என்றும், மார்த்தா மரியா போன்று இறைப்பணியினை சிந்தனையிலும், செயலிலும் எடுத்துரைத்து வாழ்ந்தவர் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.

"இதயத்தின் ஞானம் என்பது சிந்தனை, செயல் ஆகிய இரண்டு கூறுகளையும் எவ்வாறு இணைப்பது என்பதை அறிவதில் துல்லியமாக உள்ளது" என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டிய கர்தினால் செமராரோ அவர்கள், வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க விரும்பினால், இந்த இரண்டு மனப்பான்மைகளையும் நாம் இணைக்க வேண்டும் என்றும் கூறினார்.

அருளாளர் ஜொவான்னி மெர்லினோ சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்டவர், எல்லாருடனும் நட்புறவு கொள்பவர், ஆலோசனை வழங்குபவர், துன்பத்தில் இருக்கும் மக்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவுபவர் என்றும், புத்துணர்ச்சி, உடன் பிறந்த உணர்வு கொண்டு இதயங்களில் நம்பிக்கையையும், அன்பையும் கொண்டு சான்றுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜனவரி 2025, 13:49