திருத்தந்தை உங்களை அன்புகூர்கிறார் : பேராயர் காலகர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2017-ஆம் ஆண்டிற்கான சட்டகக் கோப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான கூட்டு ஆணையத்தில் கலந்துகொள்வதற்காக அண்மையில் காங்கோ குடியரசிற்குப் பயணம் மேற்கொண்டார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
இந்த ஒப்பந்தம் காங்கோ-பிராசாவில்லில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையின் சட்டப்பூர்வமான நிலையை அங்கீகரிக்கிறது. மேலும் 2019-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தம், தலத்திருஅவையின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாக்கிறது.
தனது இந்தப் பயணத்தின்போது, பேராயர் காலகர் அவர்கள், தலத்திருஅவைசார் இயக்கங்களின் யூபிலி விழாவைக் கொண்டாடியதுடன், ஆயர் பேரவை மற்றும் பிற அதிகாரிகளையும் சந்தித்தார்.
மேலும் பேராயர் காலகர் அவர்கள், காங்கோ மக்கள் அனைவருக்கும், குறிப்பாக, கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு திருத்தந்தையின் உடனிருப்பைத் தெரிவித்ததுடன், அவர்களின் நல்வாழ்வுக்கான அவரின் அக்கறையையும் வெளிப்படுத்தினார்.
1977-ஆம் ஆண்டு மறைச்சாட்சியாய் மரித்த கர்தினால் Emile Biayenda அவர்களின் சாட்சிய வாழ்வை மேற்கோள் காட்டி, நற்செய்தி மற்றும் நீதிக்கான காங்கோ மக்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார் பேராயர் காலகர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறும், 'எதிர்நோக்கு உங்களிடமிருந்து அகற்றப்பட அனுமதிக்காதீர்கள்' என்ற வார்த்தைகளை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களுக்கு சவால் ஒன்றை விடுத்த பேராயர், விரக்தியைவிட நம்பிக்கையுடன் எதிர்காலத்தை அணுகும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்