அந்த்ரேயா தொர்னியெல்லி: AI என்பது தனித்து சிந்திப்பதற்கு இயலாதது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கருவிதானேயொழிய, தனித்து நின்று இயங்கும் அல்லது சிந்திக்கும் ஒன்றல்ல என்பதால், அதற்கு மனித குணநலன்களை சூட்டுவதோ, நுண்ணறிவு என்ற பெயரைச் சூட்டுவதோ சரியல்ல எனக் கூறியுள்ளார் திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டுத் துறையும், கலாச்சார மற்றும் கல்வித் துறையும் இணைந்து ஜனவரி 28, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு குறித்த Antiqua et nova என்ற ஏடு பற்றி தன் கருத்துக்களை வெளியிட்டபோது தொர்னியெல்லி அவர்கள் இவ்வாறு கூறினார்.
செயற்கை நுண்ணறிவு என்ற மென்பொருள் தன்னிலையிலேயே நின்றுகொண்டு உண்மைதன்மைகளை புரிந்து கொண்டு முடிவு எடுக்கும் ஒன்றல்ல என்பது மட்டுமல்ல, தானாகவே எதையும் உருவாக்கும் ஆற்றலும் அற்றது எனக் கூறும் வத்திக்கான் செய்திப்பிரிவின் தலைவர், ஓர் ஒழுக்கரீதி ஆய்ந்தறியும் தன்மையை தானாகவே அது தனக்குள் கொண்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மனித அறிவு என்பது தனித்துவம் வாய்ந்தது, சமூகப்பண்பையும், பகுத்தறிவையும், உணர்வுகளையும் உள்ளடக்கியது என்பது மட்டுமல்ல, அது மனித உறவுகளில் தொடர்ந்து வளர்வது எனக்கூறும் தொர்னியெல்லி அவர்கள், செயற்கை நுண்ணறிவு என்பது மனித அறிவுக்கு உதவும் ஒன்றாக இருக்கலாமேயொழிய அதற்கு பதிலான ஒன்று என ஒரு நாளும் கூறமுடியாது என மேலும் தெரிவித்தார்.
AI என்ற இந்த மென்பொருளை உருவாக்கியவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் இந்த கருவிக்கு எவ்விதமான ஒழுக்கரீதி சார்ந்த பொறுப்புணர்வும் கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்ற மென்கருவி எந்த அளவுக்கு மனித மாண்பையும் பொது நலனையும் ஊக்குவிக்கிறது மற்றும் மதிக்கிறது என்பதையும் ஆராய வேண்டிய தேவை உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் வத்திக்கான் செய்திப்பிரிவுத் தலைவர் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்