ҽ

Dilexit nos என்னும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய சுற்றுமடல் Dilexit nos என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய சுற்றுமடல் 

கிறிஸ்துவின் நேசத்தை புரிந்து கொள்ள உதவும் சுற்றுமடல்

திருத்தந்தை : ‘நாமே நம் இதயம்’ என்றும், நம்மை தனித்துவப்படுத்துவதும், ஆன்மீக அடையாளத்தை வடிவமைப்பதும், பிறருடன் நம்மை ஒன்றிப்பில் வைத்திருப்பதும் நம் இதயமே.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

Dilexit nos என்னும் தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய சுற்றுமடல், கிறிஸ்து நம்மை எவ்வாறு நேசிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது என்று கூறியுள்ளார் வத்திக்கான் செய்தி இயக்குனர் Andrea Tornielli.

கிறிஸ்து நம்மீது கொண்டுள்ள அன்பின் ஆழத்தை, நீண்ட விளக்கங்களால் அல்ல, உறுதியான செயல்களால் காட்டினார் என்று திருத்தந்தையின் சுற்றுமடலை வத்திக்கான் செய்திகளின் ஆசிரிய தலையங்கப் பகுதியில் விளக்கியுள்ள  இயக்குனர்,    ஆண்டவர் இயேசு பிறருடன் கொண்டிருந்த உறவுகளை  ஆராய்ந்து பார்ப்பதன் வழியாக, அவர் நம் ஒவ்வொருவரையும் எவ்வாறு நடத்துகிறார் என்பதை நாம் உணர முடியும் என்று திருத்தந்தை தனது புதிய சுற்று மடலில் எடுத்துரைத்ததை தெரிவித்துள்ளார்.

கிரேக்க பகுத்தறிவாதம், பிந்தைய கிறிஸ்தவ இலட்சியவாதம், பொருள்முதல்வாதம், தனிநபர்வாதம் ஆகியவற்றின் குழந்தைகளாகிய நாம் கிறிஸ்தவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள போராடி வருகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை தன் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.

கிறிஸ்தவம் என்பது  ஓர் உயிருள்ள நபருடனான சந்திப்பு என்றும், கிறிஸ்து நம்மை எவ்வாறு நேசிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு கிறிஸ்துவுடன் ஓர் உறவை ஏற்படுத்துவது என்றும், இது பகுத்தறிவால் வெல்லப்பட்ட ஒன்றாகவோ,  ஒரு கலாச்சார அடையாளமாகவோ குறைத்து மதிப்பிட முடியாதது என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளதை தெரிவித்துள்ளார் வத்திக்கான் செய்தி இயக்குனர்.

இயேசு நம்மை எவ்வாறு நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது இதயம் சார்ந்தது என்று கிறிஸ்துவின் அன்பை திருத்தந்தை விளக்குவதையும் எடுத்துரைத்துள்ளார் தொர்னியெல்லி.

‘நாமே நம் இதயம்’ என்றும், நம்மை தனித்துவப்படுத்துவதும், ஆன்மீக அடையாளத்தை வடிவமைப்பதும், பிறருடன் நம்மை ஒன்றிப்பில் வைத்திருப்பதும் நம் இதயமே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டியதையும் தெரிவித்துள்ளார் வத்திக்கான் செய்தி இயக்குனர்.

நற்செய்திப் பகுதிகளை தியானிப்பதன் வழியாகவும், கிறிஸ்துவின் உரையாடல்களை ஆய்ந்துணர்வதின் வழியாகவும், அவரின் அன்பை நாம் புரிந்து கொள்ளமுடியும் என்று திருத்தந்தை வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்  தொர்னியெல்லி.

ஆண்டவர் இயேசு தன் முழு கவனத்தையும் ஒவ்வொரு தனிநபருக்கும், குறிப்பாக, தேவையிலிருப்போர் மற்றும் துன்புறுவோர் மீது செலுத்துவதை அவருடைய செயல்களின் வழியாக நாம் கண்டுகொள்ள முடியும் என்றும் கூறியதோடு, நசரேயன் என்று  இயேசு தன்னை முன்வைப்பது நண்பர்களுக்கே உரித்தான நட்புணர்வை வெளிப்படுத்துவதாகும் என்று திருத்தந்தை வலியுறுத்தியதை மேலும் தெரிவித்துள்ளார் வத்திக்கான் செய்தி இயக்குனர்.

கிறிஸ்தவ விசுவாசத்தை எதிர்கொள்வது என்பது கிறிஸ்துவின் இதயத்தை சந்திப்பதாகும் என்றும், கிறிஸ்துவின் இதயம் தனது  எல்லையற்ற இரக்கத்தால் நம்மை அரவணைத்து, அவரைப் பின்பற்ற நம்மை அழைக்கும் இதயம் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டதை எடுத்துரைத்துள்ளார்  தொர்னியெல்லி.

தம்மை பின்பற்ற அழைக்கும் இயேசுவின் இதய அன்பு சமூக விளைவுகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் போர்கள், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நுகர்வு கலாச்சாரம், தொழில்நுட்பத்தின் மனிதாபிமானமற்ற பயன்பாடு ஆகியவற்றின் பிடியில் உள்ள உலகம் இயேசுவின் இதயத்திலிருந்து தொடங்கி மாற்றம் பெறக்கூடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார் வத்திக்கான் செய்தி இயக்குனர் தொர்னியெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2024, 16:45