ҽ

வானவேடிக்கைகள் வானவேடிக்கைகள்&Բ;

தீபாவளி திருநாளுக்கு பல்சமய உரையாடல் அவையின் வாழ்த்து

உடன்பிறந்த உணர்வு கொண்டு வாழ்வதன் வழியாக இணைப்பின் பாலங்களை உருவாக்குபவர்களாக நாம் மாற முடியும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒளியின் ஆதாரமான கடவுள், தீபாவளி திருநாள் கொண்டாடுபவர்களின் மனதையும் இதயத்தையும் அமைதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்பட்டும் என்றும், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இரக்கம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்றும் வாழ்த்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது திருப்பீடத்துறையின் பல்சமய உரையாடல் அவை.

அக்டோபர் 31 வியாழனன்று சிறப்பிக்கப்பட இருக்கும் தீபாவளி திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இவ்வாறு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ள திருப்பீடத்துறையின் பல்சமய உரையாடல் அவையானது கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் இருவருக்கும் இடையில் நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வரலாற்றில் மனிதர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர் என்றும், பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் அனைவரிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்நாள் அழைப்புவிடுக்கின்றது என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை வழங்குவதன் வழியாகவும், பன்முகத்தன்மையைப் போற்றி மதித்து செயல்படுத்துவதன் வழியாகவும் மட்டுமே நல்லிணக்கத்தின் விதைகளை விதைத்து அறுவடை செய்ய முடியும் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது..

இறைத்திருவுளத்தில், பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகள் யாருடைய இருப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது, மாறாக இணக்கமான சகவாழ்வுக்கான பரிசாக அவை கருதப்பட வேண்டும் என்றும், பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளின் செழுமையைப் பற்றிய அதிக விழிப்புணர்வு, புரிதல் போன்றவற்றிற்காக நாம் அனைத்து மட்டங்களிலும் உரையாடலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நினைவூட்டியுள்ளது.

நிறங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதன் வழியாக மனிதத்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது என்றும், இத்தகைய வேறுபாடுகள் நம்மை வளப்படுத்துகின்றன, பன்முகத்தன்மையை மதிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

மனிதகுலத்திற்கான இறைத்திருவுளத்தை மீண்டும் கண்டறிந்து, நமது சமூகங்கள், நகரங்கள் மற்றும் நாடுகளில் கடவுளின் குழந்தைகளாகவும், உடன்பிறந்த உணர்வு கொண்டவர்களாகவும் நாம் வாழ வேண்டும் என்றும், அனைவரையும் இணைக்கும் உடன்பிறந்த உணர்வை வளர்ப்பதற்கு முன்னெப்போதையும் விட அதிக தேவை உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.

உடன்பிறந்த உணர்வுகொண்டு வாழ்வதன் வழியாக இணைப்பின் பாலங்களை உருவாக்குபவர்களாக நாம் மாற முடியும் என்றும், அனைத்து வகையான நிரந்தர பொருளாதார மற்றும் சமூக துயரங்கள், ஒற்றுமையின்மை ஆகியவற்றை வெல்ல முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளது.

வேறுபாடுகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்தின் விதைகளை விதைப்பது மிக முக்கியமான தேவை என்று வலியுறுத்தியுள்ள பல்சமய உரையாடல் அவையானது, நம்மில் இருந்து வேறுபட்டவர்கள் மீது மரியாதையை வளர்ப்பதில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2024, 14:39