ҽ

பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா  (ANSA)

யூபிலி ஆண்டு துவக்கப்படுவதற்கு முன்னர் திருஅவையில் ஏற்பாடுகள்

கிரேக்கம், பல்கேரியா, உக்ரைன், மச்சதோனியா உட்பட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 18 அரிய திருஉருவப்படங்களும் சிலைகளும் மக்களின் பார்வைக்கென வைக்கப்படவுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நம்பிக்கையின் யூபிலி ஆண்டு திருஅவையில் துவக்கப்படுவதற்கு முன்னர் அதற்கு தயாரிப்பாக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் சார்புத்தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா.

2025ஆம் ஆண்டு யூபிலி ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்னோடியாக வத்திக்கான் அருங்காட்சியகத்தின் மிக அரிய கலைப்பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதும், உலகின் மிகப்பழமையான இசைக்குழு ஒன்றின் இசைக் கச்சேரி நிகழ்ச்சியும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் யூபிலி ஆண்டிற்கான தயாரிப்புகள் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் உரோம் நகரில் இடம்பெறும் என்றார்.

மேலும், கிரேக்கம், பல்கேரியா, உக்ரைன், மச்சதோனியா உட்பட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 18 அரிய திருஉருவப்படங்களும் சிலைகளும் வத்திக்கான் அருங்காட்சியகத்திலிருந்து மக்களின் பார்வைக்கென வைக்கப்படும் என்றார் பேராயர்.

அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வு என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வல்லுனர்களின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரிய திருஉருவங்கள் உரோம் நகரின் புனித அன்னாள் கோவிலில் டிசம்பர் 14 முதல் பெப்ருவரி 16ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கென வைக்கப்படும்.

இது தவிர தூய பேதுரு சதுக்கத்தின் ஒரு புறத்தில் 100 கிறிஸ்து பிறப்பு குடில்கள் அமைக்கப்படும் என அறிவித்த பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், எட்டு ஆண்டுகளாக கிறிஸ்து பிறப்பு காலத்தில் இடம்பெற்றுவரும் இந்த 100 குடில்கள் காட்சியகம் டிசம்பர் 8 முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை மக்களின் பார்வைக்கென வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

வரும் ஆண்டு ஜப்பானின் Osaka உலக கண்காட்சியில் வத்திக்கானின்  அரங்கம் இடம்பெற்றிருக்கும் என்பதையும் அறிவித்தார் பேராயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2024, 14:37