கர்தினால் Michael Czerny தென்சூடானுக்குப் பயணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு தென்சூடானுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மேம்பாட்டுத்துறையின் தலைவரான கர்தினால் Michael Czerny அவர்கள், பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை அந்நாட்டிற்குப் பயணம் செல்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பயணத்தின்போது கர்தினால் Czerny அவர்கள் ஜூபா, மலகல் மற்றும் ரென்க் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொள்வார் என்றும், அவரதுப் பயணத் திட்டம் குறித்த முழு விபரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் Czerny அவர்கள், பிப்ரவரி 4-ஆம் தேதியன்று, ஜூபாவில் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார் என்றும், பிப்ரவரி 8-ஆம் தேதியன்று, மலக்கலில் நிகழும் திருப்பலிக்குத் தலைமைத் தாங்குகிறார் என்றும், இந்நாள் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக இறைவேண்டல் தினத்துடன் ஒத்துப்போகிறது என்றும், அவரது பயணத்திட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, கர்தினால் Czerny அவர்கள், சூடான் எல்லையில் உள்ள ரென்க் நகரத்திற்குச் செல்கிறார் என்றும், அங்கு அவர் நைல் நதிக்கரையில் ரெங்கிலிருந்து மலகல் வரை இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்வதற்காக வாங்கப்பட்ட படகினை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்துகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு தென் சூடானுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், அங்கு ஒற்றுமை மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தையுடன் ஆங்கிலிகன் திருஅவை மற்றும் இஸ்காட்லாந்து பிரஸ்பித்தர் திருஅவையின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப் பயணம் முழுவதும், தெற்கு சூடானில் உள்ள அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பல்வேறு குழுக்களையும் சந்தித்து மகிழ்ந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்