ҽ

வத்திக்கானில் முதன்முறையாக நடைபெற்ற மனநல மாநாடு!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சில வேளைகளில் செய்யப்படும் மனித உரிமை மீறல்கள் தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது : பேரருள்திரு அந்தோனி எக்போ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானில் முதன்முறையாக நடைபெற்ற மனநலம் குறித்த கலந்துரையாடல் மற்றும் இறைவேண்டல் கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து கத்தோலிக்க மனநலப் பணியாளர்கள் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத்துறையின் துணைச் செயலாளர் பேரருள்திரு அந்தோனி எக்போ அவர்கள், உலகெங்கிலும் உள்ள தலத் திருஅவைகளுடனான உரையாடலைத் தொடர்ந்து, மனநலத்திற்கு தனது முன்னுரிமையை திருப்பீடத்துறை அளித்துள்ளது என்று கூறினார்.

மனநலம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இடையேயான தொடர்பைக் குறித்துக் குறிப்பிட்டுப் பேசிய  பேரருள்திரு  எக்போ அவர்கள், காலநிலை மாற்றத்தின் அவசரநிலை தொடர்பான பதற்றங்கள் மற்றும் சிரமங்கள் யாவும், மனநலப் பிரச்சினைகளைப் பெரிதும் மோசமாக்கும் என்றும் கவலை தெரிவித்தார்.

உண்மையிலேயே உலகெங்கிலும் மனநல நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகம் உள்ளது என்று சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் Phoenix மறைமாவட்டத்தின் ஆயர் ஜான் டோலன் அவர்கள், இந்தக் காரணத்திற்காக, திருஅவை மனநலம் குறித்த காரியத்தில் மிகுந்த அக்கறை காட்ட உள்நுழைந்துள்ளது என்றும், இதனால் எவ்விதத்திலும் உதவியைப் பெறமுடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவி வழங்குவது சாத்தியமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளில் திருஅவையின் பங்கு என்பது, நோயறிதல், பரிந்துரைத்தல் அல்லது சிகிச்சையளித்தல் என்பதல்ல என்றும், இப்பணி நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஆயர் டோலன் அவர்கள், மனநலப் பிரச்சனை உள்ளவர்களுடனும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் திருஅவை துணைநிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் உலகளாவிய செப வலைதள அமைப்பின் அனைத்துலகத் தலைவர் அருள்தந்தை Frédéric Fornos, திருப்பீட வாழ்வுக் கழகத் துறையைச் சேர்ந்த முனைவர் Nunziata Comoretto, இந்தியாவின் கத்தோலிக்க மனநலப் பணியாளர்களின் சங்க உறுப்பினர் Edwin Walker ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

பொதுநிலைத் திருத்தொண்டர் Ed Shoener அவர்களின் மகள் Katie இருமுனைக் கோளாறு (bipolar disorder) நோயால் பாதிக்கப்பட்டவேளை ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நோயுடன் போராடி வெற்றிபெற முடியமால் 2016-ஆம் ஆண்டு தனது 29-வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். இம்மரணம் திருத்தொண்டர் Ed Shoene அவர்களை, அவரதுப் பங்குத்தளத்தில் மனநலம் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை வழங்கத் தூண்டியது. இதன் விளைவாக, அவர் கத்தோலிக்க மனநலப் பணியாளர்கள் அமைப்பை விரைவில் நிறுவினார். இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். மேலும் இது மனநலப் பணியாளர்கள் அமைப்புகளை நிறுவுவதில் பங்குத்தளங்கள் மற்றும் மறைமாவட்டங்களை ஆதரித்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2024, 13:40