ҽ

துறவறத்தாருடன் திருத்தந்தை துறவறத்தாருடன் திருத்தந்தை  (AFP or licensors)

துறவற வாழ்வுப் பிரதிநிதிகளின் உரோம் நான்கு நாள் கூட்டம்

எதிர்பார்ப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை, பிறரன்பில் வளர்தல், விசுவாசத்தின் சக்தியோடு இருத்தல், நம்பிக்கைக்கு சான்றாயிருத்தல் போன்ற தலைப்புகளில் துறவிகளின் கலந்துரையாடல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2025ல் கொண்டாடப்படவிருக்கும் ஜூபிலி ஆண்டிற்கு தயாரிப்பதற்கு உதவும் வகையில் உலகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட துறவற வாழ்வுப் பிரதிநிதிகள் உரோம் நகரில் நான்கு நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

கத்தோலிக்கத் துறவு சபைகள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புகளுக்கான திப்பீடத்துறையால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 4ஆம் தேதி வரை உரோம் நகரில் கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ள இந்த துறவுசபையினர் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்பினர், தங்கள் நாடுகளுக்குத் திரும்பி, ஒப்புரவுப் பணிகளில் அதிகம் அதிகமாக ஈடுபட இந்த கூட்டம் உதவும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நம்பிக்கையின் பாதையில் அமைதியின் பணியாளர்கள், என்ற தலைப்பில் ஜூபிலி ஆண்டில் அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் இடம்பெற உள்ள துறவறத்தார் கூட்டத்திற்கு தயாரிப்பாக தற்போது இடம்பெறும் இந்த நான்கு நாள் கூட்டம், எதிர்பார்ப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை, பிறரன்பில் வளர்தல், விசுவாசத்தின் சக்தியோடு இருத்தல், நம்பிக்கைக்கு சான்றாயிருத்தல் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடைல்களை நடத்தவுள்ளது.

பிப்ரவரி முதல் தேதி  துவங்கும் இந்த துறவியர் நான்கு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளாகிய பிப்ரவரி இரண்டாம் தேதி, அதாவது, இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருநாளன்று திருத்தந்தை அவர்கள் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றும் திருப்பலியிலும் இவர்கள்  ஏனைய துறவியரோடு கலந்துகொள்வர்.

300க்கும் மேற்பட்ட இந்த துறவியர் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அங்கத்தினர்களின் நான்கு நாள் கூட்டத்தில் இவர்கள் உரோம் நகரிலிலுள்ள இயேசுவின் புனித படிகளைத் தரிசிப்பதுடன், புனித செபஸ்தியார் பெயரிலான அடிநிலைக் கல்லறையையும் சென்றுப் பார்வையிடுவர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2024, 15:05