ҽ

திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபீனி. திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபீனி. 

இணைப்பின் பாலங்களை உருவாக்கும் தகவல் தொடர்பு

அன்றாட வாழ்வில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்தால் உலகமும் தகவல் தொடர்பும் சிறப்பாக இருக்கும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தகவல்தொடர்பு தனக்குள்ளேயே தொடர்பின் வேர்களைக் கொண்டுள்ளது என்றும், பகிர்தல், ஒன்றிப்பின் நூல்களை நெசவு செய்தல், சுவர்களை அன்று இணைப்பின் பாலங்களை உருவாக்குதல் போன்றவற்றை தகவல் தொடர்புகள் நமக்கு கற்பிக்கின்றன என்றும் வலியுறுத்தினார் முனைவர் பவுலோ ருஃபீனீ.

சனவரி 26 வெள்ளிக்கிழமை மிலானில் உள்ள பியோ செவித்திறன் குறைபாடுடையோர் நிறுவனத்தின் 170ஆவது ஆண்டை முன்னிட்டு, ஒருவரையும் ஒதுக்காமல் என்ற தலைப்பில் அஸ்தேரியா மையத்தில் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி.

தகவல்தொடர்பு என்பது ஒருவரையும் விலக்காமல் இருப்பது என்று வலியுறுத்திய முனைவர் ருஃபீனி அவர்கள், ஒருவரையும் விலக்கக்கூடாது, விலக்க முடியாது என்றும், அவ்வாறு விலக்கினால் தகவல்தொடர்பு தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில் அதன் ஆழமான பொருள், சாராம்சம் என்பது பிரிப்பதில் அல்ல மாறாக ஒன்றிணைப்பதில் அடங்கியுள்ளது என்றும் கூறினார்.

திருஅவையின் மாபெரும் தூண்களில் ஒன்றான தகவல் தொடர்பானது அனைவரையும் ஒன்றிணைக்க வழிவகுக்கின்றது என்று கூறிய முனைவர் ருஃபீனீ அவர்கள், போர்த்துக்கல்லின் லிஸ்பனில் நடந்த உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எல்லாரும், எல்லாரும் எல்லாரும் என்ற வார்த்தையை அதிகமதிகமாக வலியுறுத்தினார் என்றும் குறிப்பிட்டார்.

திருஅவை அனைவருக்கும் தன் கதவுகளைத் திறக்கின்றது எல்லாருக்கும் செவிசாய்க்கவும், எல்லாருடனும் உரையாடவும், எல்லாரையும் வரவேற்கவும் எப்போதும் தயாராக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய முனைவர் ருஃபீனீ அவர்கள், தகவல்தொடர்பு என்பது ஒரு தொழில்நுட்ப செயல் மட்டுமல்ல, மனித இதயத்தின் ஈடுபாடு, மற்றவர்களுக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது, இதயத்தோடு இதயம் தொடர்பு கொள்வது என்று தகவல் தொடர்புப் பணியாளர்களுக்கு திருத்தந்தை வலியுறுத்திய கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.

மிகவும் பலவீனமானவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றும், அன்றாட வாழ்வில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் உலகமும் தகவல் தொடர்பும் சிறப்பாக இருக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் எடுத்துரைத்த ருஃபீனீ அவர்கள், 170 ஆண்டினை சிறப்பிக்கும் அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களையும்  கூறினார்.

தகவல்தொடர்பு வழிமுறைகள், கட்டியெழுப்புதல் அல்லது அழித்தல், ஒன்றிணைத்தல் அல்லது பிரித்தல், உற்றுநோக்குதல் அல்லது குழப்பம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு வகையில் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன என்று சுட்டிக்காட்டிய ருஃபீனீ அவர்கள், செவித்திறன் குறைபாடு உடையவர்களிடமிருந்து செய்கை அறிகுறிகளின் முக்கியத்துவத்தை கற்றுக்கொள்ள முடிகின்றது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2024, 13:30