ҽ

கிறிஸ்து பிறப்பு நிகழ்வை தத்ரூபமாக தங்களது உடையில் வெளிப்படுத்தும் மக்கள் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை தத்ரூபமாக தங்களது உடையில் வெளிப்படுத்தும் மக்கள்  

உரோம் நகரில் வாழும் கிறிஸ்து பிறப்பு குடில் காட்சி

தூய பிரான்சிஸ் அசிசியாரின் முதல் கிறிஸ்து பிறப்பு குடிலின் 800 ஆவது ஆண்டை முன்னிட்டு இத்தாலி முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 1500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இந்நிகழ்வானது நடைபெற உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உரோம் தூய மேரி மேஜர் பேராலயம், மற்றும் கிறிஸ்து பிறப்பு குடில் இயக்கத்தாரால் நடத்தப்படும் வாழும் கிறிஸ்து பிறப்பு குடில் காட்சி நிகழ்வு கிறிஸ்து பிறப்பு கதையை மீட்டெடுக்கின்றது என்றும், நம் ஒவ்வொருவரின் இதயங்களைத் தொட்டு, கிறிஸ்து பிறப்பை நினைவூட்டுவதன் வழியாக நம்பிக்கையைப் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் கூறினார் பேராலயத்தின் பொறுப்பாளர் பேராயர் ரோலண்டஸ் மக்ரிக்காஸ். (Rolandas Makrickas)

டிசம்பர் 16 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 6.30 மணியளவில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை உரோம் மேரி மேஜர் பேராலய வளாகத்தில் தத்ரூபமாக  நடித்து காட்ட உள்ளனர் மக்கள்.

கிறிஸ்துமஸ் நிகழ்வினை அடையாளப்படுத்தும் கிறிஸ்து பிறந்த தீவனத்தொட்டியை பாதுகாக்கும் மேரி மேஜர் பேராலயத்தில் இந்நிகழ்வு நடைபெறுவது மிகச்சிறப்பானது என்றும் கூறியுள்ள பேராயர் ரோலண்டஸ் மக்ரிக்காஸ் அவர்கள், கிறிஸ்துபிறப்பு செய்தியின் முக்கியத்துவத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் பயணமாகவும், கிறிஸ்துபிறப்பு கதையின் அழகை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான அழைப்பாகவும் வாழும் கிறிஸ்து பிறப்பு குடில் விளங்குகின்றது என்றும் கூறினார்.   

தூய பிரான்சிஸ் அசிசியாரின் முதல் கிறிஸ்து பிறப்பு குடிலின் 800 ஆவது ஆண்டை முன்னிட்டு இத்தாலி முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 1500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இந்நிகழ்வானது நடைபெற உள்ளது. 

பிற்பகல் 1.00 மணிக்கு இத்தாலியில் பல பகுதிகளிலிருந்து கிறிஸ்து பிறப்பு காட்சியைத் தத்ரூபமாக வெளிப்படுத்தும் நிலைக்காட்சிப் பகுதியானது பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இத்தாலியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வரலாற்று மற்றும் நாட்டுப்புறக் குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் பிற்பகல் 2.00 மணி முதல் பேராலயத்தின் முன்புறத்தில் உள்ள இடைவெளிப் பகுதிகளில் நடைபெறும்.

பிற்பகல் 3.00 மணிக்கு வாழும் கிறிஸ்து பிறப்பு குடிலானது பொதுமக்களை கிறிஸ்து பிறப்பு சூழலுக்கு அழைத்துச் செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பின் மாலை 6.00 மணியளவில் திருற்கருணைக் கொண்டாட்டத்துடன் முடிவடையும் இந்நிகழ்வின் இறுதியில், பிறக்க இருக்கும் பாலன் இயேசுவின் திருஉருவம் ஆசீர்வதிக்கப்பட உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2023, 10:02