ҽ

புனித ஆறாம் பவுலரங்கில் கலந்துரையாடல் புனித ஆறாம் பவுலரங்கில் கலந்துரையாடல்  

2024-ஆம் ஆண்டுக்கான ஆயர்கள் மாமன்றப் பணிகள்!

கர்தினால்கள் Grech மற்றும் Hollerich ஆகியோர் வரும் 2024-ஆண்டுக்கான ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை கருத்தில் கொண்டு உலகமெங்கும் உள்ள ஆயர்களுக்கு ஒன்றிணைந்த பயணம் குறித்த செயல்முறையின் அடுத்த கட்டங்களை விளக்கி எழுதியுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்டோபர் 2024-இல் அமைக்கப்பட்டுள்ள இறுதி அமர்வைக் கருத்தில் கொண்டு ஒன்றிணைந்த பயணம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் பணிகள் தொடர்கிறது என்றும், மேலும் 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட தொகுப்பு அறிக்கையைப் பிரதிபலிக்கவும், மேலும் ஆலோசனைகளை ஊக்குவிக்கவும் அடுத்த ஆண்டு ஆயர்கள் மாமன்றப் பேரவைக்கான பங்களிப்புகளைத் தயாரிக்கவும் தலத்திருஅவைகள் அழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது சம்மந்தமாக, உலகெங்கிலும் உள்ள ஆயர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் அறிவுறுத்தல்களுடன் கூடிய ஆவணத்தை கர்தினால்கள் மாரியோ கிரேக்  (பொதுச் செயலாளர்) மற்றும் இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich (பொது அறிக்கையாளர்) ஆகியோரின் கடிதத்துடன் பெற்றுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வில் பங்கேற்றவர்கள் பெற்ற அனுபவத்தின் முக்கியத்துவத்தை முதலில் நான்கு பக்க உரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் இது எந்த உரையும் சுருக்க முடியாத அனுபவத்தின் வளமை என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றம் என்பது, ஒன்றிணைந்த பயணம் பற்றியது, கருப்பொருள் பற்றியது அல்ல என்று இதற்கு ஒப்புதல் அளித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை மனதில் கொண்டு, ஒன்றிணைந்த பயணத்தின் செயல்முறை சில வழிகளில் தொடரும் என்று கர்தினால்கள் கிரேக்  மற்றும் ஹோல்லெரிச் எடுத்துக்காட்டியுள்ளதையும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளிவந்துள்ள குறிப்பிட்ட கருப்பொருள்கள் குறித்து, சிலவற்றை அகில உலகத் திருஅவையின்  நிலையிலும், உரோமைத் தலைமைச்  செயலகத் திருப்பீடத் துறைகளுடன் இணைந்தும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த  ஆவணம் விளக்குவதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்களில், எடுத்துக்காட்டாக, இலத்தீன் வழிபாட்டுமுறை (CIC) மற்றும் கிழக்குத் திருஅவைகளுக்கான வழிபாட்டுமுறை (CCEO) திருஅவை சட்டத்தின் புதுப்பித்தலின் பார்வையில் தொடக்க ஆய்வு அடங்கும்; திருஅவையில்  ஆயர்கள் மற்றும் இருபால் துறவியருக்கு இடையேயான ஒருவருக்கொருவர்மீதான உறவுகள் பற்றிய "Mutuae உறவுகள்" என்ற ஆவணத்தின், நியமனம் செய்யப்பட்ட திருநிலைத் திருப்பணிகளை உருவாக்குவதற்கான அடிப்படை விகிதங்கள்; அல்லது திருத்தொண்டர் மற்றும் குறிப்பாக, திருத்தொண்டர் பணியில் பெண்களின் சேர்க்கை பற்றிய இறையியல் மற்றும் மேய்ப்புப் பணி ஆய்வுகளை ஆழப்படுத்துதல் அடங்கும் என்றும் அதில் குறிப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தலைப்புகளின் பட்டியல் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பயனாகத் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்படும். அனைத்து கண்டங்களில் இருந்தும் நிபுணர்கள் குழுக்கள், உரோமைத் தலைமைச்  செயலகத்தின் தொடர்புடைய திருப்பீடத் துறைகளுடன், ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, திருத்தந்தை சுட்டிக்காட்டிய தலைப்புகளில் "ஓர் ஒன்றிணைந்த பயணத்தின் வழியில்" பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும், இப்பணியின் முன்னேற்றம் குறித்த அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2023, 16:05