ҽ

புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை (கோப்புப் படம்) புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை (கோப்புப் படம்)  

ஞானியர் மூவரின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்!

இந்த உரையில், ஞானியர் மூவரின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி விசுவாசிகளை ஊக்குவித்துள்ளார். மேலும் உண்மையான நம்பிக்கையுடன் கடவுளைத் தேடுவது, அவருக்கு நம் இதயங்களையும் பரிசுகளையும் வழங்குவது, சுதந்திரத்தையும் மனித மாண்பையும் தரும் அவருடைய அரசாட்சியை அங்கீகரிப்பது ஆகியவற்றைக் குறித்தும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

குழந்தை இயேசுவின்மீது மூன்று ஞானியர் கொண்டிருந்த நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நாமும் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீவிர நுரையீரல் அழற்சி நோய் காரணமாக, உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேளை, பிப்ரவரி 19, இப்புதனன்று, தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வி உரைக்காகத் தயாரித்து வழங்கியுள்ள எழுத்துவடிவப் படிவத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

யூபிலி ஆண்டில், "எதிர்நோக்கின் திருப்பயணிகள்" என்ற தலைப்பில் தொடர்ந்து புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவரும் திருத்தந்தை, இவ்வாரம் மத்தேயு நற்செய்தியிலிருந்து (மத் 2:9-11) மூன்று ஞானியர் குழந்தை இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வு குறித்து தனது சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

ஞானியர் வெளியாள்களாகக் (outsiders) கருதப்படுவது, அவர்கள் வெவ்வேறு நாடுகளையும் வாழ்வின் நிலைகளையும் சேர்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, ஞானியர் ஒரு விதிவிலக்கான உருவத்தின் பிறப்பைக் குறிக்கும் விண்மீன் ஒன்றினால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும், மேலும் அவர்கள் புதிதாகப் பிறந்த அரசரைத் தேடு வருகிறார்கள் என்றும் உரைத்துள்ளார்.

தாழ்மையான மனம்கொண்ட ஞானியர் மற்றும் இயேசுவின் பிறப்பால் அச்சம் கொள்ளும் ஏரோது மன்னனுக்கு இடையே உள்ள வேறுபாடு, தெய்வீக உண்மையுடன் ஒப்பிடுகையில் மண்ணுலகுக்குரிய வலிமையின் பலவீனத்தைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஞானியரின் பயணம் நம்பிக்கை, துணிவு மற்றும் எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது என்றும், அவர்கள் தெய்வீக வழிகாட்டுதலைப் பின்பற்றி, குழந்தை இயேசுவிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, ஞானியர் இயேசுவுக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்குகின்றனர் என்றும், அவர்கள் அவரை ஏழ்மையின் கோலத்தில் கண்டபோதிலும், அவரை கடவுளாக ஏற்று வணங்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞானியர் மூவரும் யூதரல்லாத நாடுகளிலிருந்து வந்த முதல் விசுவாசிகளையும், அனைத்து மொழிகளிலும் நாடுகளிலும் ஒன்றித்திருக்கும் திருஅவையின் உருவத்தையும் அடையாளப்படுத்துகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2025, 13:05