ҽ

வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு

மனித வாழ்வின் துன்பங்கள் மற்றும் கவலைகளுக்கு நடுவில் கடவுளின் அழகு மறைந்துள்ளது, எல்லாம் இழந்துபோனதாகத் தோன்றினாலும் எதிர்நோக்கானது இருக்கின்றது என்பதை எடுத்துரைக்க இயேசு படகில் ஏறி அமர்ந்தார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது வாழ்க்கை என்னும் படகில் இயேசு காலடி எடுத்து வைக்கும்போதும், எப்போதும் நம்மைத் தாங்கி நிற்கும் கடவுளது அன்பின் நற்செய்தியைக் கொண்டு வரும்போதும், ​​வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது, எதிர்நோக்கு மீண்டும் பிறக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியின்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு சீடர்களைப் பார்த்தார், படகில் ஏறினார், அமர்ந்தார் என்னும் இயேசுவின் மூன்று செயல்கள் குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்த இயேசு தன்னையும், தனது பணி மற்றும் மறைப்பணிக்கான பாதை பற்றிய ஓர் உருவத்தையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கருதவில்லை. மாறாக, அன்றாட வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், இதயத்தைக் கடினப்படுத்தி எதிர்நோக்கை இழக்கச் செய்கின்ற கவலைகள் போன்றவற்றைக் கொண்ட மக்களைச் சந்தித்து அவர்களுடனான உறவை வெளிப்படுத்துகின்றார் என்று கூறினார் திருத்தந்தை.

இயேசு சீடர்களைப் பார்த்தார்

ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்பதையும், மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்ததையும் கண்ட இயேசு, அவர்களை இரக்கம் நிறைந்த பார்வையுடன் உற்றுநோக்கினார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கடவுளின் இரக்கம், அருகிருப்பு, மென்மை போன்றவற்றை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும், இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்த சீடர்களுக்கு இரக்கம் நிறைந்த பார்வையை இயேசு வழங்குகின்றார் என்றும் கூறினார்.

மீன்பாடு எதுவும் கிடைக்காததால் மனச்சோர்வு, விரக்தி போன்றவற்றைக் கொண்டிருந்த மீனவர்களின் இதயமானது, அவர்கள் கைகளில் வைத்திருந்த வலைகளைப் போலவே வெறுமையாக இருந்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசு நம் அருகில் இருக்கின்றார், இரக்கமும் மென்மையும் கொண்டவராய் இருக்கின்றார் என்றும் கூறினார்.

உடல்நலமின்மைக் காரணமாகத் திருத்தந்தை அவர்களால் மறையுரையினைத் தொடர்ந்து வாசிக்க இயலாமல் போகவே, திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளின் உதவியாளர் திருத்தந்தை சார்பாக மறையுரையினைத் திருப்பயணிகளுக்கு வாசித்தார்.

இயேசு படகில் ஏறினார்

சீமோனின் படகில் ஏறிய இயேசு அவரிடம், படகை கரையிலுருந்து சற்றே தள்ளும்படி கேட்டுக்கொண்டார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வெறுமையான சீமோனின் இதயத்திற்குள் இயேசு நுழைகின்றார், தோல்விகளால் நிறைந்திருந்த அவரது இதயத்திற்குள் நுழைகின்றார் என்றும் கூறினார்.

தவறாக நடக்கும் விடயங்களை இயேசு வெறுமனே கவனித்து, புலம்பலிலும் கசப்பிலும் யாரையும் விட்டுவிடுவதில்லை, மாறாக, தனது முயற்சிகளால் சீமோனை சந்தித்து, அவரது கடினமான தருணத்தில் அவருடன் நின்று, வெற்றியைப் பெறாமல் கரையில் நின்றுகொண்டிருந்த அவரது வாழ்க்கையின் படகில் ஏற முடிவு செய்கிறார் என்றும் கூறினார்.

இயேசு படகில் அமர்ந்தார்

இயேசு படகில் அமர்ந்தார் என்ற செயலானது போதகரும் கற்பிப்பவருமான இயேசுவை அடையாளப்படுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மீனவர்களின் கண்களிலும் இதயங்களிலும் இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்து தோல்வியடைந்த கசப்புணர்வைக் கண்ட இயேசு, அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் என்றும் கூறினார்.

ஏமாற்றம் என்னும் இரவில், நம்பிக்கை என்னும் ஒளியைக் கொண்டுவர, நற்செய்தியை எடுத்துரைத்த இயேசு, மனித வாழ்வின் துன்பங்கள் மற்றும் கவலைகளுக்கு நடுவில் கடவுளின் அழகு மறைந்துள்ளது, எல்லாம் இழந்துபோனதாகத் தோன்றினாலும் எதிர்நோக்கானது இருக்கின்றது என்பதை எடுத்துரைக்க இயேசு படகில் ஏறி அமர்ந்தார் என்றும் கூறினார்.

நமது வாழ்க்கை என்னும் படகில் இயேசு காலடி எடுத்து வைக்கும்போதும், எப்போதும் நம்மைத் தாங்கி நிற்கும் கடவுளது அன்பின் நற்செய்தியைக் கொண்டு வரும்போதும், ​​வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது, எதிர்நோக்கு மீண்டும் பிறக்கிறது, இழந்த உற்சாகம் திரும்புகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பணியானது, இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நாடுகளின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு, சட்டபூர்வமான தன்மை மற்றும் நீதியின் பாதுகாவலர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

இயேசுவைப்போல உதவி, பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் இருக்கும் மக்களைப் பாருங்கள், அவர்களது வாழ்க்கைப் படகில் ஏறுங்கள், அமருங்கள், நற்செய்தியின் வெளிச்சத்திலும், நன்மைக்கான பணியிலும் தொடர்ந்து நிலைத்து நில்லுங்கள் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 பிப்ரவரி 2025, 09:07