ҽ

ஜெமெல்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

உடல்நிலை தேறி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை விரைவில் பூரண குணமடைய வேண்டி தன் ஆவலை வெளிப்படுத்தும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்கென சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் உடல்நிலை குறித்து ஜெமெல்லி மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசனைகளுக்குப் பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீட சமூகத் தொடர்புத்துறை, வெள்ளி காலையில் உடல் நல முன்னேற்றத்துடன் படுக்கையில் இருந்து எழும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை சிற்றுண்டியை அருந்தியபின், தன் அலுவலக வேலைகளை சிறிய அளவில் மருத்துவமனை அறையிலேயே துவக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, திருத்தந்தை விரைவில் பூரண குணமடைய வேண்டி தன் ஆவலை வெளிப்படுத்தும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் துருக்கி நாட்டு பயணம் குறித்து திட்டமிடுவதற்கென திருப்பீட பயண ஏற்பாட்டுக் குழு துருக்கி நாட்டிற்கு சென்றுள்ள வேளையில், தன் கைப்பட கடிதம் எழுதி அக்குழுவின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் கூவக்காடு வழியாக அனுப்பியுள்ள முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், திருத்தந்தை விரைவில் குணமடைய தான் செபிப்பதாகவும், தன் புனிதக் கடமைகளை நிறைவேற்ற திருத்தந்தை விரைவில் நலம் பெற்று வத்திக்கான் திரும்ப ஆவல் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் நலமுடைய தாங்கள் செபிப்பதாக உலகம் முழுவதும் உள்ள தலத் திருஅவைகளில் இருந்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2025, 09:35