வாழ்வை மீண்டும் துவக்க அழைக்கும் யூபிலி ஆண்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
வாழ்வின் பயணத்தில் கடவுளின் சிறப்பான கொடையைக் கேட்பதற்காகவும், வாழ்வை மீண்டும் தொடங்குவதற்காகவும் நாம் இந்த யூபிலி ஆண்டில் திருப்பயணிகளாக இறைவன் முன் வருகின்றோம் என்றும், நம்மை பொறுத்து அல்ல, மாறாக, எதிர்நோக்குக் கடவுளின் அரசைப் பொறுத்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 11 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு யூபிலி ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் வழங்க இருக்கும் புதிய மறைக்கல்வி உரையின் முதல் கூட்டத்தின் போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூபிலி ஆண்டில் புதிய வாழ்வையும் புதிய கட்டத்தையும் நாம் தொடங்குவோம் என்று கூறினார்.
எதிர்நோக்கு என்னும் இறையியல் பண்பானது, இலத்தீன் மொழியில் விர்த்தூஸ் அதாவது வலிமை என்னும் பொருள்படுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அது ஒருவரிடம் இருக்கின்றது மற்றவரிடம் இல்லை என்று கூறும் பழக்கவழக்கமோ, பண்பு நலனோ அல்ல மாறாக, எதிர்நோக்கு என்பது இறைவனிடமிருந்து வரக்கூடிய ஓர் ஆற்றல் நாம் கேட்கவேண்டிய ஆற்றல் என்றும் எடுத்துரைத்தார்.
இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடி மகிழ இருக்கும் நமக்கு எதிர்நோக்கின் பெரிய இறைவாக்கினராக திருமுழுக்கு யோவான் திகழ்கின்றார் என்றும், மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை என்று இயேசு சுட்டிக்காட்டியது போன்று அவர் தனது தனித்தன்மை மிக்க ஆளுமைப்பண்பால் சிறந்து விளங்கினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
திருமுழுக்கு யோவான், யோர்தான் ஆற்றைக் கடந்தது போல, யோசுவா வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தது போல, நாமும் புனித கதவின் வழியாக நுழைய அழைக்கப்படுகின்றோம் என்றும், மீண்டும் வாழ்வைத் தொடங்க வலியுறுத்தப்படுகின்றோம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், மீண்டும் தொடங்குதல் என்னும் வார்த்தையை மறந்துவிடவேண்டாம் என்றும் கூறி அதனை மீண்டும் மீண்டும் உரக்கக் கூறச்சொன்னார்.
இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து எடுத்துரைக்கும்போது அவர் ஏரோது அரசனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இறையரசைத் தடுக்கும் பல ஏரோதுக்கள் இன்னும் நம் மத்தியில் இருந்தாலும் இயேசு நமக்குப் புதிய வழியைக் காட்டுகின்றார் என்றும் கூறினார்.
திருப்பயணிகளாகிய நமக்கு ஏன் இறையரசைத்தடுக்கும் ஏரோதுக்கள் இத்தனை பேர் இருக்கின்றன என்ற கேள்வி எழும்பலாம், இருப்பினும் இயேசு நமக்கான புதிய வழிகளைக் காட்டுகின்றார், பேறுபெற்ற பாதைகளைக் காட்டுகின்றார் என்ற நம்பிக்கையில் துணிந்து நடக்கவேண்டும் என்றும், நமது வாழ்வை மீண்டும் துவக்குவதற்கான விருப்பம் நமக்கு இருக்கின்றதா? யார் பெரியவர் என்று இயேசுவிடம் கற்றுக்கொள்ள விரும்புகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
மிகச்சிறியவர்கள் விண்ணரசில் மிகப்பெரியவர்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், காயம்பட்ட நமது பூமி, அதில் வாழும் சக மனிதர்கள் ஆகியோரின் நலனுக்காகவும் புதிய வாழ்விற்காகவும் செபிப்போம் என்றும், கடவுளின் பெரிய வேறுபட்ட மகிமையில் நமது வாழ்வை மீண்டும் துவங்குவோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்