ҽ

புதன் மறைக்கல்வி உரை - அன்னை மரியாவிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு

ஜனவரி 22 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நமது எதிர்நோக்காம் கிறிஸ்து என்னும் தொடர் மறைக்கல்வி உரையின் ஒரு பகுதியாக அன்னை மரியாவிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜனவரி  22 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நமது எதிர்நோக்காம் கிறிஸ்து என்னும் தொடர் மறைக்கல்வி உரையின் ஒரு பகுதியாக அன்னை மரியாவிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025 ஆம் ஆண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் திருஅவையானது யூபிலி ஆண்டினை சிறப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது எதிர்நோக்காம் இயேசு கிறிஸ்து என்னும் புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த வாரங்களில் இயேசுவின் குழந்தைப் பருவம் என்பது குறித்தும், இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படும் சிறார் என்பது குறித்தும் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். இன்று அதன் தொடர்ச்சியாக அன்னை மரியாவிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்காக  வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தனர். அரங்கத்தின் மேடைப்பகுதியைத் திருத்தந்தை பிரான்சிஸ் வந்தடைந்ததும், மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்ததும் லூக்கா நற்செய்தியில் உள்ள கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

லூக்கா 1: 26 -28

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

இன்று நமது எதிர்நோக்காம் இயேசு கிறிஸ்து என்னும் யூபிலி ஆண்டின் மறைக்கல்வி தொடருக்குள் மீண்டும் நுழைவோம். புனித லூக்கா  தனது நற்செய்தியின் தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு என்னும் தலைப்பில் இறைவார்த்தையின் ஆற்றல் பற்றி எடுத்துரைக்கின்றார். திருக்கோயில்களுக்குள் மட்டுமல்ல சாதாரணமான எளிய இளம்பெண்ணும், யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டவருமான கன்னி மரியா தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இல்லத்திலும் இறைவன் தனது இறைவார்த்தையால் ஆற்றல் மிக்க செயல்களை, விளைவுகளை ஏற்படுத்துகின்றார் என்பதை எடுத்துரைக்கின்றார் புனித லூக்கா.

கடவுளின் மிகப்பெரிய அறிவிப்பாளரான தூய கபிரியேல் தனது பெயருக்கேற்றவாறு கடவுளின் ஆற்றலை எடுத்துரைக்க அனுப்பி வைக்கப்படுகின்றார். எபிரேய மொழி திருவிவிலியத்தில் ஒருபோதும் குறிப்பிடப்படாத ஒரு சிறு கிராமமான நாசரேத் என்னுமிடத்திற்கு அனுப்பப்படுகின்றார். இஸ்ரயேலின் புறநகர்ப்பகுதியில் உள்ள கலிலேயாவின் ஒரு சிறிய கிராமப் பகுதியான நாசரேத் அக்காலத்தில் புறமதத்தவர்களும் அவர்களது தூய்மைக்கேடான செயல்களும் நிறைந்த எல்லைப் பகுதியாக இருந்தது.   

இத்தகைய பகுதியில் தான் வானதூதர் கபிரியேல், முற்றிலும் கேள்விப்படாததும் அன்னை மரியாவின் உள்ளம் கலக்கமும் நடுக்கமும் அடைவதுமான செய்தியைக் கொண்டு வருகின்றார். உங்களுக்கு அமைதி உண்டாகுக என்ற வழக்கமான வாழ்த்திற்குப் பதிலாக அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று புனித வாழ்வின் வரலாற்றுக்கு மிகவும் உகந்த வாழ்த்து மொழியோடு வாழ்த்துகின்றார். ஏனெனில் இறைவாக்கினர்கள் மெசியாவின் வருகை குறித்து சீயோன் மகளுக்கு அறிவிக்கும்போது, மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி என்றே அறிவிக்கின்றார்கள். நாடுகடத்தல் முடிவடைந்து மக்கள் தங்களது நாட்டிற்கு வந்தடைந்து கடவுளது மகிழ்வின் அழைப்பை உணர்கின்றார்கள். கடவுளோ தனது வாழும் உடனிருப்பையும், செயலையும் அம்மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

கடவுள் மரியாவை விவிலிய வரலாற்றில் அறியப்படாத அன்பின் பெயரால் அழைக்கிறார்: kecharitoméne, அதாவது இறைஅருளால் நிரப்பப்பட்டவர். இந்த பெயர் கடவுளின் அன்பானது, நீண்ட காலமாக மரியாவின் இதயத்தில் இருந்து வருகிறது, தொடர்ந்து வாழ்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது. அவர் எவ்வளவு அருளுடையவர் என்பதையும், குறிப்பாக கடவுளின் அருள் அவரில் நிறைவுற்று தலைசிறந்த கடவுளின் படைப்பாக அவரை மாற்றுவதில் ஓர் உயர்வை எவ்வாறு நிறைவேற்றியுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

கடவுள் மரியாவிற்கு மட்டுமே கொடுக்கும் இந்த அன்பான புனைப்பெயரானது, உடனடியாக அஞ்சவேண்டாம் என்ற உறுதிமொழியுடன் வருகிறது, தனது முக்கியமான பணிகளை ஒப்படைக்கும் அனைத்து ஊழியர்களிடமும் கடவுள் அஞ்சாதே என்பதை எடுத்துரைக்கின்றார். ஆபிரகாம், ஈசாக்கு, மோசே என தனத் அடியார்கள் அனைவரிடமும் அவர் இதனை தெரிவித்துள்ளார். இறைவன் எல்லாம் வல்லவர் அவரால் இயலாதது எதுவுமில்லை அவர் மரியாவுடன் இருக்கின்றார்,  அவரது அருகில் இருக்கின்றார், உடன் நடப்பவராக, நிலையானவராக நான் எப்போதும் உன்னுடன் இருக்கின்றேன் என்று உறுதியளிக்கின்றார். அன்று அவருக்கு அருளிய இந்த வார்த்தை இன்று நமக்கும் அருளப்பட்டுள்ளது. இன்பம் துன்பம், கவலை, வருத்தம், தோல்வி என வாழ்வின் எல்லா சூழலிலும் கடவுள் நம்மிடமும் கூறுகின்றார்.

பின்னர் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவிற்கு கடவுள் கொடுத்த பணியை அறிவிக்கிறார், பண்டைய இறைவாக்கினர்கள் வழியாக முன்வைக்கப்படும் மெசியாவின் வருகை குறித்த இறைவார்த்தைகளை எடுத்துரைத்து அவரிடமிருந்து பிறக்கவிருக்கும் குழந்தைக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது என்று கூறுகின்றார். இறைவனிடமிருந்து வரும் வார்த்தை மரியாவை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தாவீதின் வழித்தோன்றலான மெசியாவின் தாயாக இருக்க அழைக்கிறது. அவர் மனித, உடல் வழியில் அல்ல, தெய்வீக, ஆன்மிக வழியில் அரசராக இருப்பார் என்றும், அவருடைய பெயர் மீட்பர் என்று பொருள்படும் "இயேசு" என்றும் கூறுகின்றார்.  அவரே இவ்வுலகை மீட்க இருப்பவர் என்று எடுத்துரைத்து கடவுளால் மட்டுமே நம்மை மீட்க முடியும் என்றும் கூறுகின்றார். உண்மையில், எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றுபவர் இயேசுவே:  துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார். என்று எடுத்துரைக்கின்றார் எசாயா.

அன்னை மரியாவின் இத்தகைய முற்றிலும் தனித்துவமான தாய்மை அவரது அடிப்படை வாழ்வையே அசைக்கிறது. அன்னை மரியா ஒரு புத்திக்கூர்மை உடைய பெண்ணாக, அதாவது, நிகழ்வுகளை சிந்தித்து தேர்ந்து தெளியும் உள்ளம் கொண்டவராக இருக்கின்றார். என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளவும், தனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் முயல்கிறார்.. மரியா வெளியே தேடுவதில்லை, மாறாக தனக்கு உள்ளே தேடுகிறார்.

மரியா நம்பிக்கையுடன் ஒளிர்கின்றார். இறைவார்த்தையை தன் சொந்த உடலில் வரவேற்கிறார், இதனால் ஒரு மனித உயிரினத்திடம் ஒப்படைக்கப்பட்ட மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறார். நிறைவுள்ள பெண்ணாக வாழ்கின்றார். சகோதரிகளே, சகோதரர்களே, மீட்பர் இயேசுவின் தாயும் நம் தாயுமான மரியாவிடமிருந்து நாமும் கற்றுக்கொள்வோம். இறைவார்த்தையால் நம் காதுகளைத் திறக்க அனுமதிக்கவும், இறைவார்த்தையை வரவேற்கவும், பாதுகாக்கவும் கற்றுக்கொள்வோம். இதனால் நமது இதயங்கள் இயேசுவை சுமக்கும் நற்கருணைப்பேழைகளாக மாறவும், எதிர்நோக்கை நாடுபவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்கும் இல்லங்களாகவும் மாறும்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் நிறைவு செய்ததும் உலக அமைதிக்கான செப விண்ணப்பங்களை எடுத்துரைத்தார்.

கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்து, அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் எதிர்நோக்கின் சாட்சிகளாக இருக்க குவாதலுப்பே அன்னை மரியா பரிந்து பேசுவாராக என்று கூறினார்.

துன்புறும் உக்ரைன் பாலஸ்தீனம், இஸ்ரயேல் மக்களை மறந்துவிடக்கூடாது அவர்களுக்காக செபிப்போம். அமைதிக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள்,போர் எப்போதும் தோல்வி தான் அழிவைத்தரும் போர் நிறுத்தப்பட்டு உலகில் அமைதி நிலவ செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார். அண்மையில் காசா தலத்திருஅவையில் பங்குத்தளம் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தங்கியிருக்கும் 600 பேர் போர் நிறுத்தத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை எடுத்துரைத்து அவர்கள் நல்ல உணவை உண்கின்றார்கள் என்று மகிழ்வுடன் எடுத்துரைத்ததாகவும் கூறினார். காசா பகுதி மக்களுக்காகத்தொடர்ந்து செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், போரினால் ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர், மற்ற யாருக்கும் எனத பயனும் இல்லை என்று கூறி அமைதிக்காக செபிக்க வலியுறுத்தினார்.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள், புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்துக்கான இந்நாள்களில் கிறிஸ்துவின் அன்னைத்து சீடர்களின் ஒற்றுமைக்காக ஒருவராகவும் தமத்திரித்துவமாகவும் இருக்கும் கடவுளிடம் செபிப்போம் என்றும் கூறினார்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது உலக அமைதிக்கான செப விண்ணப்பங்களை நிறைவுசெய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2025, 08:47

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >