நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பல்மதத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் மரியாதையுடன் ஒன்று கூடி, உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பின் வழியாக சந்திக்கும் கலாச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போதெல்லாம், சிறந்த மற்றும் நீதியான உலகத்திற்கான நமது நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 16, வியாழக்கிழமை இன்று, அல்பேனியாவின் பெக்தாஷி முஸ்லிம்களின் உலகத் தலைவர் Dede Edmond Brahimaj அவர்களின் தலைமையிலான தூதுக்குழு ஒன்றைத் திருப்பீடத்தில் சந்தித்தவேளை, இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, உண்மையில், நமது மத நம்பிக்கைகள் நமது பொதுவான மனிதகுலத்தின் இந்த அடிப்படை விழுமியங்களை இன்னும் தெளிவாகத் தழுவிக்கொள்ள உதவுகின்றன என்றும் எடுத்துக்காட்டினார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும் அல்பேனியாவுக்கும் இடையிலான நட்புறவை தனது உரையில் பாராட்டிய திருத்தந்தை, உடன்பிறந்த உறவு மற்றும் அமைதி நிறைந்த சக வாழ்வுக்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.
1993 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அமைதிக்கான இறைவேண்டல்கள், மற்றும் 2015-ஆம் ஆண்டு நிகழ்ந்த பெக்தாஷி (Bektashi) கோவில் திறப்பு விழா போன்ற கடந்தகால ஒத்துழைப்புகளை தனது உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதில், குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு சமய நம்பிக்கைகளின் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இறுதியாக, அவர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காகத் தனது இறைவேண்டல்களுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, இந்தப் பணிகளைத் தொடர ஒருவருக்கொருவர் மீதான ஆதரவுத் தேவை என்பதை எடுத்துக்காட்டி இந்த உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்