அல்பேனிய பேராயர் அனஸ்தாஸ் மறைவிற்குத் திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 25, இச்சனிக்கிழமையன்று, அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் அனஸ்தாஸ் (Anastas) அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி, இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர் அனஸ்தாஸ் உடனான தனது தனிப்பட்ட சந்திப்புகளை இந்தச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்கான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் கிரீஸ், ஆப்பிரிக்கா மற்றும் அல்பேனியாவில் அவரது மறைத்தூதுப் பணிகளையும் பாராட்டியுள்ளார்.
பேராயர் அனஸ்தாஸ் அவர்கள் உரையாடலில் விருப்பத்துடன் ஈடுபட்டார் என்றும், பிற கிறித்தவ சபைகள் மற்றும் மதங்களுடன் அமைதியான சகவாழ்வை ஊக்குவித்தார் என்றும், தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை .
தனது மண்ணாக வாழ்வு நிறைவடைந்த நிலையில், விண்ணகத்தில் கடவுளின் மற்ற உண்மையுள்ள ஊழியர்களுடன் இணைந்து மூவொரு கடவுளைப் போற்றிப் புகழும் அருள்நிலையைப் பெற தான் அவர்களுக்காக இறைவேண்டல் செய்தாகக் கூறி இந்த இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்