அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து
மெரினா ராஜ் - வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 47 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 20 திங்கள் கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாற்பத்து ஏழாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு அவர்கள் தனது உயர்கடமைகளை நிறைவேற்ற எல்லாம் வல்ல கடவுள் ஞானத்தையும், ஆற்றலையும், பாதுகாப்பையும் வழங்குவார் என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக இரண்டாவது முறை பொறுப்பேற்கும் டிரம்ப் அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், வாய்ப்புக்களையும், அனைவரையும் வரவேற்கும் நிலத்தின் அடையாளமாய்த் திகழும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் டொனால்டு அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் செழிப்புடன் வாழ்ந்து பாகுபாடு, விலக்கிவைத்தல் ஆகியவை இல்லாத நீதியுள்ள சமுகத்தை உழைக்கப் பாடுபடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
ஏராளமான சவால்களை மனித குடும்பம் எதிர்கொள்ளும் வேளையில், மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அவரது முயற்சிக்கு கடவுள் உதவ செபிப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், அரசுத்தலைவர் அவரது குடும்பத்தார் மற்றும் மக்கள் அனைவர் மீதும் இறைவனின் ஆசீரை வழங்குவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சனவரி 20 திங்கள்கிழமை டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகத் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கியுள்ளார். ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்