ҽ

ஏழைகளிடத்தில் இறைத்தந்தையின் மென்மையை வெளிப்படுத்துங்கள்

அதிகமான செல்வங்களை உடையவர்களாக மறைநூல் அறிஞர்கள் இருந்தாலும் சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களிடத்தில் இருந்த செல்வங்களை அவர்களிடத்திலிருந்து பிடுங்கி வாழும் கொடிய எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளை விரும்புபவர்கள், பிறருக்கு முன்னால் நல்லவர்கள் போல நடப்பவர்கள் ஆகியோர் குறித்து கவனமாக இருங்கள் என்று கூறிய இயேசு அதற்கு மாறாக, தன்னலமற்ற பணி, தாழ்ச்சியுள்ள பணி, தேவையிலிருப்பவர்களிடத்தில் இறைத்தந்தையின் மென்மை முதலிய பண்புகள் கொண்டவர்களாக வாழுங்கள் என்று  கற்பிக்கிறார் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை பொதுக்காலத்தின் 32ஆம் ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்ற நற்செய்தி வாசகம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொங்கள் ஆடை அணிந்து சந்தைகளில் நடமாடுதல், மக்களிடம் இருந்து வணக்கத்தைப் பெறுதல், தொழுகைக்கூடங்களில் முதன்மை இருக்கைகள், விருந்துகளில் முதன்மை இடங்கள் ஆகியவற்றை விரும்புபவர்கள் மறைநூல் அறிஞர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தங்களது அதிகாரம் மற்றும் பதவியினால் ஏழை எளியவர்களை மிகவும் கீழானவர்களாகக் கருதினர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மறைநூல்களைப் பற்றிய அறிவு கொண்டிருந்தாலும் அதன்படி நடக்க அவர்கள் தவறினார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அதிகமான செல்வங்களை உடையவர்களாக அவர்கள் இருந்தாலும் சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களிடத்தில் இருந்த செல்வங்களை அவர்களிடத்திலிருந்து பிடுங்கி வாழும் கொடிய எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களைக் கொடுமை துன்பம் போன்றவற்றிற்கு ஆளாக்குபவர்களாகவும், அவர்களை அடக்கி ஆளும் கருவிகளாக செல்வத்தைப் பயன்படுத்துபவர்களாகவும் மறைநூல் அறிஞர்கள் மாறினார்கள் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

செபிக்கும் நேரம் கூட அவர்களுக்கு, இறைவனை சந்திக்கும் நேரமாக இல்லாமல், மரியாதை மற்றும் போலியான பக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இது மக்களின் கவனத்தை ஈர்க்கவும் பாராட்டைப் பெறவும் பயன்படுகிறது என்று கூறி வரி செலுத்துபவர் மற்றும் பரிசேயரின் செபத்தைப் பற்றி இயேசு சொல்வதை நினைவுகூர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேவையில் இருக்கும் மக்களை அதிகார நிலையில் இருந்து பார்த்து, அவர்களை அவமானப்படுத்தாமல், நம்பிக்கையையும் உதவியையும் அளிக்க இயேசுவின் போதனைகள் நம்மை அழைக்கின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எனது பொறுப்புகளில் நான் எவ்வாறு செயல்படுகின்றேன்? நான் மனத்தாழ்மையுடன் செயல்படுகிறேனா, அல்லது என் பதவியில் நான் பெருமைப்படுகிறேனா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.

நான் மக்களிடம் தாராளமாகவும் மரியாதையுடனும் இருக்கிறேனா, அல்லது நான் அவர்களை முரட்டுத்தனமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் நடத்துகிறேனா? மற்றும் மிகவும் பலவீனமான நிலையில், நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேனா, அவர்கள் மீண்டும் எழுந்திருக்க உதவுவதற்கு எப்படி நான் பணியாற்ற வேண்டும் என்று எனக்குத் தெரியுமா? என்பன போன்ற கேள்விகளை நமக்குள் கேட்டு செயல்பட வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமக்குள் இருக்கும் வெளிவேடத்தனத்தின் சோதனையை எதிர்த்துப் போராட கன்னி மரியா நமக்கு உதவுவாராக என்றும் கூறினார்.

வெளிவேடத்தனம் மிகவும் கொடிய சோதனை என்று இயேசுவே கூறுகின்றார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், எளிமையான உள்ளத்துடன் நாம் வாழ இறைமகன் இயேசு நமக்கு உதவுவாராக என்று கூறி மூவேளை செப உரையைத் தொடர்ந்த தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2024, 14:50