ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான பயிற்சி கல்வி

இயேசு, தனது கருத்துக்களைக் கேட்பவர்கள் வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுவதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கல்வி என்பது வெறும் பாடத்திட்டத்தை மட்டும் பகிர்வதல்ல, மாறாக வாழ்க்கைக்கான மாற்றம் என்றும், பாடங்களில் வரும் சிக்கல்களை மட்டுமல்ல, உலகில், வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான பயிற்சி என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 9 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பணி, கற்றல் மற்றும் கல்விக்கான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த சிந்தனைக் கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் ஏறக்குறைய 250 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு உவமைகள் வழியாக தனது கருத்துக்களைப் பிறருக்குக் கற்பித்தார், அவரது கற்பிக்கும் பணி மிகவித்தியாசமானது, நேர்த்தியானது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பிறர் புரிந்துகொள்ளும் வகையிலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எளிய கதைகள் வழியாக தனது கருத்துக்களை இயேசு வழங்கினார் என்றும் கூறினார்.

உவமை என்பது அதனைக் கேட்போர் கதைக்குள் தாங்கள் நுழையவும், தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், கதாபாத்திரங்களுடன் ஈடுபடவும் உதவுகின்ற வகையில் சொல்லப்படுவது என்றும், இயேசு தனது கருத்துக்களைக் கேட்பவர்கள் வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுவதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இதற்கு நேர்மாறாக, இன்றைய உலகமயமாக்கலானது, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு அடிபணியக்கூடிய சில திட்டங்களின் திசையில் சமன் செய்யும் செயல்முறையில் கல்விக்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இந்நிலையானது, கருத்தியல் நிலைப்பாட்டின் வடிவங்களாக கல்விப்பணியினைச் சிதைக்கின்றது என்றும் கூறினார்.

மனித மாண்பை மேம்படுத்துதல், உண்மையைத் தேடுதல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செயல்களுக்கான விருப்பத்தின் கருவியாக உலகமயமாக்கல் விளங்குகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கல்வியின் தரத்தை நாம் மாற்றாவிட்டல் இவ்வுலகை நம்மால் மாற்ற முடியாது என்றும் கூறினார்.

கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு ஏற்ப தனித்துவமாக சிறப்புடன் வாழ்கின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பெயரளவில் இல்லாமல் நற்செய்தியின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அர்ப்பண மனநிலையுடன் கூடிய கற்பித்தல் பணியில் தொடர்ந்து வளரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எவாஞ்சலி கௌதியம் என்னும் திருத்தூது மடலில் உள்ள "யோசனைகளை விட எதார்த்தங்கள் மிகமுக்கியம்" மற்றும் "முழுமை என்பது அதன் பகுதியை விட பெரியது என்பவற்றை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், எதிர்கால சவால்களை சந்திக்கும் வகையில் கத்தோலிக்க பள்ளிகள் நிலையான மாற்றங்களைச் செய்ய துணிவுடன் அழைக்கப்படுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

முதலாவதாக, கல்வித் திட்டங்கள் மாணவர்களை அவர்களைச் சுற்றியுள்ள உண்மைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும், இதனால், அனுபவத்திலிருந்து தொடங்கி, அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக அல்ல, ஆனால் பணிசெய்யும் உணர்வில் உலகை மாற்ற கற்றுக்கொள்கிறார்கள்.

இரண்டாவதாக, கத்தோலிக்கக் கல்வியானது கேள்விகளைக் கேட்கும் கலையை வலியுறுத்தி, "ஆர்வத்தின் கலாச்சாரத்தை" ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் அறிவை மனத் திறன்களாகக் குறைக்காமல், அந்தத் திறன்களை செயல்முறை திறமை மற்றும் பெருந்தன்மையான இதயத்துடன் இந்த பெரிய உலகைப் பார்க்க வைகுக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

கல்வி என்பது நமது அறிவு, இதயம், கை என்னும் மூன்றின் வழியாக கற்கப்படுவது என்றும், நாம் என்ன உணர்கிறோம், செய்கிறோம் என்பதை சிந்திக்கவும், நாம் செய்வதை உணர்ந்து எடைபோடவும், நாம் நினைப்பதையும் செய்ய கற்றுக்கொள்ளவும் வேண்டும் இந்த மூன்று மொழிகள் மிக அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2024, 13:57